சென்னையில் முதல்முறையாக களம் இறங்குகிறார் ஜெ!
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெற்றி வேல் தனது பதவியை நேற்று திடீரென இராஜினாமா செய்தார். அவ ரது இராஜினாமாவை பேரவைத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காகவே வெற்றிவேல் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த செப்ரெம் பர் 27ஆ-ம் திகதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற காரணத்தால் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார். அதைத் தொடர்ந்து செப் டெம்பர் 29-ஆம் திகதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.
இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத் தில் ஜெயலலிதா மேன்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த 11-ஆம் திகதி தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை ஏற்பதில் ஜெயலலிதாவுக்கு இருந்த சட்டரீதியான தடை நீங்கியது. அத னால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தெரிவு செய்யப்படுவார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா செய் வார் என்றும், 22 அல்லது 23 ஆம் திகதி ஜெயலலிதா பதவியேற்பார் என் றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா, 6 மாதத்துக்குள் ஏதாவது ஒருதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக தங்கள் பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பல சட்டமன்ற உறுப்பினர்க்கள் அறிவித்தனர். அ.தி.மு.க.வில் மட்டுமின்றி, அதிருப்தி தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தரராஜன், அருண் சுப்பிரமணியம், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், அணைக்கட்டு தொகுதி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோரும் அவ்வாறு அறிவித்தனர். அதனால், ஜெயலலிதா எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சென்னையில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.