வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் பிரதமர் உறுதியளிப்பு - சுரேஷ்
வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா தொடர்பாக பக்கச்சார்ப்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாரரளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை 4.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இச்சந்திப்பு குறித்து பாரர்ளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னர் யாழ்.குடாநாடு உட்பட வடக்கில் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டு அச்ச சூழலொன்று நிலவுகின்றது. மேலும் இக்கொலை தொடர்பாக நீதியான விசாரணை முன்னெடுப்பதை தடுப்பதற்கும் திசைதிருப்பும் வகையிலும் சில சக்திகள் திரைமறைவில் செயற்படுவது போன்ற தோற்றப்பாடு எழுந்துள்ளது.
ஆகவே, குறித்த சிறுமியின் விடயத்தில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிச்சட்டங்களுக்கு அமைவாக தண்டிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க இவ்விடயம் தொடர்பாக தாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு விசாரணைகளின் போது அநீதி இழைக்கப்படாது நீதி நிலைநாட்டப்படும் என குறிப்பிட்டார்.
அதேநேரம் ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்.குடாநாட்டில் ஏற்பட்டிருந்த அமைதிநிலைமை சீர்குலைந்து அச்சமான சூழலொன்று நிலவுவதை பிரதமரிடத்தில் சுட் டிக்காட்டியதோடு குறித்த மாணவிக்கு ஆதரவாகவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களில் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் காணப்படுகின்றார்கள். அப்பாவி இளைஞர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்காது விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.
அச்சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களிடம் விசார ணைகள் முன்னெடுக்கப்படுதாகவும் சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடை யவர்கள் தவிர ஏனையோர் விரைவில் விடு விக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார் என்றார்.