கைது செய்யுமாறு உத்தரவிடும் அதிகாரம் தேசிய நிறைவேற்று சபைக்கு கிடையாது - ஜீ.எல்.பீரிஸ்
அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களது செயற்பாட்டை நிறுத்துவதற்காகவும் அவர்களது நடவடிக்கைகள் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயத்தினாலுமே எதிர்க்கட்சியிலுள்ள பிரபல உறுப்பினர்களை அரசாங்கம் கைதுசெய்கின்றது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் எந்தவொரு நபரையும் கைதுசெய்யுமாறு கட்டளையிடும் அதிகாரம் தேசிய நிறைவேற்று அதிகார சபைக்கு கிடையாது.அதன் செயற்பாடுகளும் சட்டவிரோதமானவை எனவும் அவர் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் நேற்று நடைபேற்ற ஊடகவியலாளர் மாநா ட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
விசேட நிதி மோசடி விசாரணைப்பிரிவின் நடவடிக்கைகள் அரசியல் வேலைத்திட்டமாகவே அமைந்திருக்கின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸுக்குள் வேறு ஒரு பிரிவை அமைப்பதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு மாத்திரமே இரு க்கின்றது. ஆனால் பிரதமரின் தலைமையிலுள்ள அமைச்சரவையின் உப குழுவின் கீழேயே விசேட நிதிமோசடி விசாரணைப்பிரிவு இயங்குகின்றதுடன் அதன் கட்டளை யின் பிரகாரமே செயற்படுகின்றது.
மேலும் அரசாங்கத்தின் அரசியல் நடவ டிக்கைகளுக்காகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய் யப்பட்டுள்ளனர். இது அவர்களது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் செயற்பாடாகும்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக் ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதிவரை கைதுசெய்ய முடியாது என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பானது தனிமனித சுதந்திரத்துக்கும் சட்டத்தின் சுயாதீன தன்மைக்கும் கிடைத்த வெற்றியாகும்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் நிதிமோசடிக்கும் தொடர்பில்லை. இதேவேளை, மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதி மன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கி பிணை முறி நிதிமோசடிக்கும் தொடர்பில்லை. அடிப்படை உரிமை மீறல் சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதல்ல என்ற காரணத்துக்காகவே அது தள்ளுபடி செய்யப்பட்டது. மாறாக மத்தியவங்கி ஆளுனரின் செயற்பாடு மோசடியா இல்லையா அல்லது இங்கு தவறொன்று ஏற்பட்டதா இல்லையா என்று உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு அமையவில்லை.
மேலும் நிதி தொடர்பான சகல பொறுப்புக்களும் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது.அதனால்தான் எதிர்வரும் 19 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது 9அமைச்சர்கள் உட்பட 90 உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட குற்றப்பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளோம். அத்துடன் மிகவும் அவசரமாக இதை பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறும் கேட்கவுள் ளோம் என்றார்.