வில்பத்து பகுதியில் காடழிப்பு இடம்பெறின் உடனடியாக நிறுத்துக!
வில்பத்து சரணாலயப் பகுதியில் இடம்பெறும் காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு இடங்கள் சுவீகரிக்கப்படுமாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பகுதியிலுள்ள அரச அதிகாரிகளுக்கும் இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியூதின் வில்பத்து சரணாலயப் பகுதிகளில் காடுகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதாக, பொதுபல சேனா அமைப்பு அண்மைக் காலமாக குற்றம்சாட்டி வருகின்றது.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்களை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதின் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதனை நிரூபித்தால் பதவி விலகுவதாகவும் அவர் கூறியிருந்தார்.