புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாம் தமிழர் கோரிக்கை
தமிழ் நாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த தீர்மானங்கள் வருமாறு,
* தனி ஈழம் மட்டுமே ஒவ்வொரு தமிழருக்குமான தாயக விடுதலை. தமிழ் தேசியத்துக்கான விடுதலையும் அதுவே. ஒரே இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் வாழ்கிறீர்களா? அல்லது தனித் தமிழீழமாக மீள்கிறீர்களா? என கேட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இதற்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இன அழிப்பு போரில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் மீதும், ராஜபக்ஷ மீதும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்ய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.
* முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை அடைந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை மத்திய, மாநில அரசுகள் மனசாட்சியோடு விடுதலை செய்ய வேண்டும். அவர்களை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு தாயுள்ளத்தோடு மேற்கொள்ள வேண்டும்.