மகிந்த- மைத்திரி பனிப்போர் – ஜூலை 1இல் இறுதி முடிவு
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச அணிக்கும், மைத்திரிபால சிறிசேன அணிக்கும் இடையில் பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஜூலை 1ஆம் நாள் இறுதியான முடிவு ஒன்று தெரியவரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு அணிகளுக்கு இடையிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்வது குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை இரு அணிகளும் பலசுற்றுப் பேச்சுக்களை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, மைத்திரிபால சிறிசேன தரப்பு இணங்கியுள்ளது. ஆனால், மகிந்த ராஜபக்சவைப் போட்டியிட அனுமதிக்க முடியாது என்று மைத்திரி தரப்பு கூறிவிட்டது.
மகிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட வேண்டும் என்றும், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச தரப்பு வலியுறுத்தி வருகிறது. பரப்புரை மேடையில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு கட்சிக்குத் தேவையென்றால், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அணியினர் விடாப்பிடியாக உள்ளனர்.
இந்த நிலையில், இருதரப்பும் ஜூலை 1ஆம் நாள் ஏதாவதொரு முடிவுக்கு வருவர் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன தரப்பு இணக்கம் தெரிவிக்காவிடின் தனித்துப் போட்டியிடும் முடிவை மகிந்த ராஜபக்ச அன்றைய நாள் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.