ராஜித்தவின் கருத்து என்னையும் மதத்தையும் அவமதிக்கும் செயல் - ஹக்கீம் விசனம்
ஜனாதிபதி கதிரைக்கு ஆசைப்பட்டு நான் மதத்தைதக்கூட மாற்றிக் கொள்வேன் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறிய கருத்து என்னையும், நான் பின்பற்றும் மதத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூ டாக ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் எனும் தலைப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ்ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அமைச்சரவையில் எமது குரல்கள் அடக்கப்படுகின்றன என்று நான் பாராளுமன்றத்தில் கூறிய கருத்தை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தன்னைச் சுற்றி பேசியதாக கருத்திற் கொண்டு செய்தியாளர் மாநாட்டில் என்னைப்பற்றி மிக ஆவேசமாக கூறியிருந்தார். என்றாலும் அமைச்சரின் கூற்றுக் குறித்து நான் அலட்டிக்கொள்ளவில்லை.
அரசியலில் இவ்வாறு ஆளுக்காள் குறைகூறிக் கொள்வது வழமையாகும். இருந்தபோதும் ஜனாதிபதி கதிரை எனக்கு கிடைப்பதாக இருந்தால் நான் மதத்தைக்கூட மாற்றிக் கொள்ளலாம் என அவர் கூறியிருப்பது என்னையும் நான் பின்பற்றும் மதத்தையும் எனது மக்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதையிட்டு நான் கவலைப்படுகின்றேன்.
மேலும் அமைச்சரவை பேச்சாளர் என்ற அந்தஸ்த்தில் இருக்கின்ற ஒருவர் இவ்வளவு தூரம் பொறுப்புணர்ச்சியில்லாமல் ஆவேசப்படுவது பொருத்தமில்லாததாகும். இதற்கு முன்பும் இவர் முன்னுக்குப்பின் முரனாக பேசி பொறுப்பில்லாத அமைச்சராக இருப்பதுடன் அமைச்சரவையின் பேச்சாளர் என்ற அந்தஸ்தையும் இழந்து வருகின்றார் என்றார்.