Breaking News

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு ஆதரவாக முகநூலில் திரண்டுள்ள 14 ஆயிரம் பேர்

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு முகநூலில் ஆதரவு பெருகி வருகிறது.

போர் வீரர் சுனில் ரத்நாயக்கவைப் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முகநூலில், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த முகநூலில், தவறிழைத்த இலங்கைப் படையினருக்குத் தண்டனை வழங்கப்படுவதற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்படுவதுடன், மரணதண்டனைக் குற்றவாளியான சுனில் ரத்நாயக்க குற்றமிழைக்காதவர் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவரவுள்ள நிலையிலும், இலங்கையில் உள்நாட்டு விசாரணை செப்ரெம்பரில் ஆரம்பிக்கப்படும் உள்று உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுனில் ரத்நாயக்கவுக்கு ஆதரவான இந்த சமூக ஊடகப் பரப்புரைகள் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இலங்கையில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், புலிகளுடன் போரிட்ட படையினருக்கு தண்டனை அளிக்கப்படுவதான பரப்புரைகளை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.