“தேசிய அரசை உருவாக்குவதே கூட்டமைப்பின் நோக்கம்”
இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற த்தேர்தலின் முடிவில் தற்போது அமைந்திருப் பதைப் போன்றதொரு தேசிய அரசை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறையாக இருக்கும் என்கிறார் அதன் பொதுச்செயலாளர் கே .துரைராஜசிங்கம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த நாடாளுமன்றத்துக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்த இன்றைய கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்த துரைராஜசிங்கம், நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே பிரதான நோக்கம் என்று தெரிவித்த அவர், தேசிய அளவில் தற்போது இருப்பதைப் போன்றதொரு தேசிய அரசாங்கம் அமைவதே தமிழர் தரப்புக்கு நன்மை பயக்கும் என்பதால், அத்தகையதொரு முடிவை தேர்தலில் உருவாக்குவதே தமது தேர்தல் உத்தியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கு மாற்றாக மேலதிக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.