லண்டன் பேச்சுக்களின் விபரங்கள் வெளியாகின! புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு ஏமாற்றம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இரண்டு முதலமைச்சர்களுக்கும் பொதுவாக மத்திய அரசில் அமைச்சர் ஒருவர் பதவிவகிப்பார் என்றும் அவரிடமே காணி, பொலிஸ் அதிகாரங்கள் இருக்கும் எனவும் அரசாங்கம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாகவே லண்டனில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சு நடத்தியிருந்ததாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படையிலேயே எதிர்வரும் டிசம்பர் மாதம் புலம்பெயர் தமிழர் விழா ஒன்றை கொழும்பில் நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வழங்குவதில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளது என்றும், எனினும் கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசின் தமிழர் ஒருவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமித்து, அவரிடம் அந்த அதிகாரங்களை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த யோசனை தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இருவரும் உரையாடியுள்ளனர்.
அந்த இணக்கத்தின் அடிப்படையில் புலம்பெயர் நாடுகளிலுள்ள சில அமைப்புகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பேச்சு நடத்தினர். புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு இணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இந்த புதிய யோசனையின்படி 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இந்த ஆண்டின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சரமவீர புலம்பெயர் அமைப்புகளுடன் உறுதியளித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் மாதம் பதவியேற்றதும் இந்த யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டு, 13ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று லண்டன் பேச்சுக்களின்போது கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும கிழக்கு மாகாண முதலமைச்சர்களின் அதிகாரங்களுக்கு மேலாக மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கக்கூடிய தமிழர் ஒருவருக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டு, காணி,பொலிஸ் மற்றும் நிதி விடயங்களைக் கையாளும் அதிகாரங்கள் அந்த அமைச்சருக்கு வழங்கப்படபவுள்ளன.
இரண்டு மாகாண முதலமைச்சர்களும் அந்த அமைச்சருடன் பேசி தமது மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் யோசனையின் உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர, புலம்பெயர் அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
சட்டத்தரணி சுமந்திரன் அது தொடர்பான மேலதிக விளக்கங்களை புலம்பெயர் அமைப்புகளுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலம்பெயர் அமைப்புகளுடன் அரசாங்கம் உரிய முறையில் இது தொடர்பாக பேசவில்லை என்றும் லண்டனிலுள்ள தமக்குச் சாதகமான குறிப்பிட்ட சில நபர்களுடன் மாத்திரமே பேசியதாகவும் கனடாவிலுள்ள தமிழர் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.








