வீடு திரும்பினார் பஷில் மஹிந்தவுடனும் சந்திப்பு
விளக்கமறியலில் இருந்து பிணை கிடைத்த பின்னர் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தின் பிரபல தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ நேற்று வீடு திரும்பினார்.
சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பஷில் ராஜபக் ஷ நேற்று பகல் வேளையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
எதிர்க்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் அங்கு என்ன பேசப்பட்டது என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்திருந்தார். நாட்டுக்கு வந்த அவர் திவி நெகும திணைக்களத்தில் இடம்பெற்ற 3 வெவ்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்க கடுவலை நீதிவான் மறுத்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு பிணை கிடைத்தது. எனினும் சுகயீனம் காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையிலேயே இருந்து வந்த பஷில் ராஜபக்ஷ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் அம்பியூலன்ஸ் வண்டியிலேயே அழைத்துச் செல்லப்பட்டார்.
விளக்கமறியலில் இருந்த போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் அறவிடப்படும் அறையொன்றில் இருந்து சிகிச்சைப் பெற்ற பஷில் ராஜபக்ஷ பிணைக் கிடைத்த பின்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந் நிலையிலேயே நேற்று அவர் சிகிச்சைகளை முடித்துக்கொன்டு வீடு திரும்பியுள்ளார்.








