ஐ.தே.க.வின் யோசனை சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அழிக்கும் - சம்பிக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல்முறை மாற்று யோசனையானது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அழித்து விடும். இதை தெரிந்தே பிரதமர் தனது யோசனைகளை முன்வைத்துள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தேர்தல் முறைமை மாற்று யோசனைத் திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெலஉறுமய கட்சியால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவருவது இந்த நாட்டு மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகும். ஆனால் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவருவதில் முக்கிய சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தமது ஆசனத்துக்கான பிரதிநிதியை சரியாக நியமிக்கும் வகையில் சிக்கல் இல்லாத தேர்தல் கொள்கை அவசியமானதாக்கும். மற்றயது பலமான எதிர்க்கட்சி அமைய வேண்டும்.
அதேபோல் மிக முக்கியமானது தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவருவதால் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளை பாதிக்கக் கூடாது. இதுவரை நடைமுறையில் இருந்துவரும் தேர்தல் முறைமை ஒரு கட்சிக்கான சர்வாதிகாரத்தை பலப்படுத்துகின்றது. இதில் எதிர்க்கட்சி காணாமல் போய்விட்டது. அதேபோல் ஏனைய சிறிய கட்சிகளும் அடக்கப்படுகின்றன. இதுவரையிலும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவே நடந்தது. எனவே தேர்தல் முறை மாற்றத்தில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறான நிலையில் இன்று பிரதான இரு தரப்புகளின் தேர்தல் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதி தலைமையில் ஒரு தேர்தல் திருத்த யோசனைத் திட்டமும் பிரதமர் தரப்பில் ஒரு ஆலோசனை திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ளது யோசனையின் படி 255 பேர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். இதில் 196 பேர் விகிதாசார தேர்தல் முறைமையிலும் 59 பேர் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்தை பிரதிநித்தித்துவப்படுத்த முடியும்.
பிரதமரின் ஆலோசனையின்படி ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமாற்ற யோசனையில் 125 பேர் தொகுதிவாரி முறையிலும், 75 பேர் மாவட்ட விகிதாசார முறைப்படியும் ஏனைய 25 பேர் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.
இவை இரண்டுமே விகிதாசார முறையின் படியே தெரிவு செய்யப்படுகின்றது. இது இரண்டு முறைமையிலும் பிரதான கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இதில் மிக முக்கியமானதொரு பிரச்சினை உள்ளது. அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முறைமை மாற்று யோசனை திட்டத்துக்கு அமைய நாட்டின் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை 125 ஆசனங்களுக்கு மட்டுப்படுத்த முடியுமா? அதேபோல் மாறுபட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகளுக்கு சரியான அங்கத்துவத்தை வழங்குவதை உறுதிப்படுத்த முடியுமா? நாட்டில் 125 தொகுதிகள் தான் இருக்கும் என்றால் ஒரு பிரதிநிதிக்கான வாக்கு எண்ணிக்கை 1 இலட்சத்து 24 ஆயிரமாகும். இது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாறுபடும்.
கொழும்பில் இது சாத்தியம் ஆனால் யாழ்ப்பாணத்துக்கு இந்த முறைமை முரண்படும். யாழ்ப்பாணத்தில் மக்களின் எண்ணிக்கை குறைவாகும். ஆகவே வடக்கில் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாவது குறைவாகவே அமையும். இதற்கு மக்கள் தயாராக இல்லை. வடக்கைப் போல் ஏனைய பகுதிகளிலும் இந்த சிக்கல் நிலைமை உள்ளது. வடக்கின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சிக் தெரிவிக்கின்றது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முறைமாற்று யோசனையில் வட மாகாணம் அதிகமாக பாதிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் யோசனையில் தமிழ் பிரதிநிதித்துவம் தடுக்கப்படும் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இவற்றை மூடி மறைத்து தமது காரியங்களை சாதிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது. வடக்கில் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் கொழும்பில் அதிகரிக்கும் என்பதை வெளிப்படையாக பிரதமர் தெரிவித்து அதற்கு கட்சிகள் இணக்கத்தை தெரிவித்தால் அதை நிறைவேற்ற முடியும்.
ஆனால் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முறை மாற்று திட்டத்தில் முறைமையில் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் பாதிக்கப்படும் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாமல் நடக்கும் வேலைத்திட்டம் அல்ல. ஐக்கிய தேசியக் கட்சி தெரிந்தே இந்த முறைமையை கையாள்கின்றது.
அதேபோல் ஜனாதிபதி முன்வைத்துள்ள முறைப்படி கலப்பு முறைமையில் சிறிய மாற்றங்கள் ஏற்படும். ஆனால் பெரிய குழப்பங்கள் எதுவும் ஏற்படாது. அதேபோல் தேசியப் பட்டியல் முறைமையில் அதிகரிப்பு இருக்கின்றதால் சிறுபான்மைக் கட்சிகள் பாதிக்கப்படாது. ஆகவே ஜனாதிபதி முன்வைத்துள்ள முறைமை மற்றதையத்தை விடவும் நல்ல முறைமையாகும். சகல கட்சிகளும் இதில் பாதிக்கப்பட மாட்டாது.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முறைமை மாற்று திட்டம் பலமான எதிர்க்கட்சியை உருவாக்காது சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் மட்டுப்படுத்தப்படும். ஆகவே இது எமது நாட்டுக்கு உகந்தது அல்ல. எனவே ஜனாதிபதியின் யோசனையை நிறைவேற்றவேண்டும். இதை தடுக்க முயற்சிக்கும் அனைவரும் தேசத்துரோகிகளேயாவர். அவர்கள் இந்த நாட்டில் நல்லதொரு மாற்றத்தை கொண்டுவரும் சந்தர்ப்பத்தை தடுத்தவர்களாக பெயர்பெறுவர். அந்த பெயரை ரணில் பெற்றுவிட வேண்டாம்.
மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையைக் கொண்டுவருவதால் 20 ஆவது திருத்தச் சட்டமே தடுக்கப்படுகின்றது. பிரதமரை மாற்றவேண்டும் என்றால் உடனடியாக பொதுத் தேர்தலுக்கு சென்று மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அதை விடுத்து நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்து உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்தால் 20 ஐ நிறைவேற்ற முடியாமல் போய்விடும். அதை செய்ய ஒருசிலர் முயற்சிக்கின்றனர் அதை தடுக்க வேண்டும். எனவே இரு தரப்பிலும் இருக்கும் பிரிவினைவாதிகளின் செயற்பாட்டை தடுத்து 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.