லண்டன் பேச்சில் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பேசப்பட்டதா? எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உலகத் தமிழர் பேரவையுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டன் நகரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இப்பேச்சுவார்த்தை தொடர்பில் அமைச்சரவையினதும் ஜனாதிபதியினதும் அல்லது பிரதமரினதும் அனுமதியை வெளிவிவகார அமைச்சர் பெற்றிருந்தாரா என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் கேள்வியெழுப்பினார்.
இப்பேச்சுவார்த்தையின் மூலமாக தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகம் ஏற்பட்டுள்ள அதேவேளை புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது பாராளுமன்ற நிலையியற் கட்டளை 323 (2) இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பி சந்தேகம் வெளியிட்டார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மிகவும் நெருக்கமான தொடர்புகளை பேணி வருகின்றதும் கடந்த பல வருடங்களாக இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பல தொடர்புகளைப் பேணி வருகின்றதும் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதுமான உலகத்தமிழர் பேரவை எனும் அமைப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர விஷேட பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக வசதி வாய்ப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்களாக தென்னாபிரிக்க அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றும் அத்துடன் நோர்வேயை தளமாகக் கொண்டியங்கும் நிறுவனம் ஒன்றும் செயற்பட்டுள்ளதாகவும் அதேநேரம் இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் நோக்கமானது 2014மார்ச் மாதம் 21ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட புலம் பெயர் தமிழ் அமைப்பை தடை செய்யும் விவகாரத்தை நீக்கிக் கொள்வதற்கும் அதே நேரம் இலங்கையில் இடம்பெற்றதாக புலம்பெயர் தமிழர்களால் கூறப்படுகின்ற யுத்தக்குற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதை வலியுறுத்தியுமே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது சமாதானப் பேச்சுவார்த்தையின் நோர்வே பிரதிநிதியான எரிக் சொல்ஹெய்மும் கலந்து கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மேற்படி உலகத் தமிழர் பேரவையுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன என்றும் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் தெரிந்து கொள்வதற்கு நாட்டு மக்களுக்கு ஆர்வமுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்ற அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நோக்கம் தொடர்பில் நாட்டு மக்கள் பாரிய அச்சத்துக்கும் சந்தேகத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்கள் அறிந்திராத வண்ணமும் பாராளுமன்றத்துக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்காத வண்ணமும் இவ்வாறான பேச்சுவார்த்தையை மேற்கொண்டதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த வகையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் உலகத் தமிழ்ப் பேரவையுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் நோக்கம் பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் இவ்வாறானதொரு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சரானவர் அமைச்சரவையினதோ ஜனாதிபதியினதோ அல்லது பிரதமரினதோ அனுமதியைப் பெற்றிருந்தாரா?
இப்பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தடையை நீக்குவதற்கு அல்லது தடை செய்யப்பட்ட புலி அமைப்பிடம் இருந்து உதவி ஒத்துழைப்பை வழங்குவதற்கு அல்லது புலிகளை தடை செய்திருப்பதான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது தொடர்பில் பேசப்பட்டதா என்பது தொடர்பிலும்,
யுத்த குற்றம் தொடர்பில் இங்கு பேசப்பட்டதா என்பது குறித்தும் அத்துடன் இந்த பேச்சுவார்த்தை தொடர்பிலும் பூரணத்துவமான அறிவிப்பினை வெளிவிவகார அமைச்சர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கான பதில் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லஷ்மன் கிரியெல்ல இதன்போது தெரிவித்தார்.