மஹிந்தவின் காலத்தில் இடம்பெற்ற அநியாயங்கள் இன்றைய ஆட்சியில் இடம்பெறுவதற்கு இடமளிக்கமாட்டோம்
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் நடந்த அநியாயங்கள் இன்றைய ஆட்சியில் இடம்பெற யாருக்கும் இடமளிக்கப் படமாட்டாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணம் முன்வைத்த பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிழக்கில் இன்று நல்லாட்சி மலர்ந்திருக்கிறது. இந்நல்லாட்சியில் என்ன நடைபெறுகிறது? என்ன விடயங்கள் நடைபெறவிருக்கின்றன என்பன தெளிவாக அறிவிக்கப்பட்டே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெறும். கடந்த ஆட்சியில் நடந்த அநியாயங்கள் இன்றைய ஆட்சியில் இடம்பெற யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது.
இன, மத வேறுபாடின்றி சகல மக்களுக்கும் சரியான வகையில் சேவைகள் சென்றடைய இன்றைய கிழக்கின் ஆட்சியில் இணைந்திருக்கும் கூட்டு மிகவும் தெளிவாக இருக்கும். அதற்காக மிகவும் உன்னிப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.
கடந்த ஆட்சியில் முதலமைச்சர்களும், அமைச்சர்களும் செய்த சேவைகள், நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை இன்றைய ஆட்சியின் சேவைகளின்போது தெளிவாக மக்களும் மக்களின் பிரதிநிதிகளும் விளங்கிக் கொள்ளும் வகையில் அதன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாரும், யாரையும் ஏமாற்ற முடியாது. நிதியொதுக்கீட்டில் மோசடி நடக்கிறது என்று உறுப்பினர் சந்திரகாந்தன் கூறுவதில் சிறிதளவும் உண்மையில்லை. முன்னாள் முதலமைச்சராக இருந்த போது அரச நிதி, மக்களின் வரிப்பணம் வீண்விரயம் செய்யப்பட்டது போன்று இன்றைய ஆட்சியில் இடம்பெறமாட்டாது.
அனைத்து செயற்பாடுகளும் சபைக்கும் மக்களுக்கும் சரியான முறையில் அறிவிக்கப்படும். அதன் பின்னர் மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.








