யாழில் நடைபெறும் கலாசார பிறழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு துணிச்சலாக செயற்படுங்கள்
யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து கலாசார உத்தியோகத்தர்களும் சமூகப் பொறுப்புக்களை உணர்ந்து குழுவாகச் செயற்படவேண்டுமெனக் கோரியுள்ள அரச அதிபர் நா.வேதநாயகன் கலாசாரப் பிறழ்வுகளைத் தடுத்துநிறுத்துவதற்கு துணிச்சலாகச் செயற்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கலாசார உத்தியோகத்தர்களுடனான விசேட சந்திப்பொன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலகங்கள், திணைக்களங்களின் கீழ் கலாசார உத்தியோகத்தர்களாக நீங்கள் செயற்பட்டு வருகின்றீர்கள். நீங்கள் அனைவரும் உங்களது கடமைகளை உணர்ந்து செயற்படவேண்டும்.
உங்களுக்கென சமூகப் பொறுப்பு காணப்படுகின்றது. அதனைக் கருத்திற்கொண்டு செயற்படுவது மிக முக்கியமானதாகும். மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என்ற பேதங்களை கருத்திலெடுக்கக் கூடாது.
கலாசாரத்தைப் பொறுத்தவரை வரையறையொன்று கிடையாது. எனினும், எமது பண்பாட்டு ரீதியான கலாசாரத்தை பாதுகாத்து வலுவூட்ட வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது. இதற்காக நாம் எப்பாகத்திற்கும் சென்று கடமையாற்ற பின்நிற்கக்கூடாது.
யாழ். மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தற்போது கலாசாரப் பிறழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. இதனைத் தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. இவற்றைத் தடுத்துநிறுத்த உரிய விழிப்புணர்வுகளையும் கண்காணிப்புக்களையும் தொடர்ச்சியாக மேற்கொள்வது அவசியமானதாகும். அதற்காக பிரதேச ரீதியாகவுள்ள பொது அமைப்புக்கள், கலாசார மையங்கள் ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொள்வதற்கு அக்கறையுடன் செயற்படவேண்டும்.
இந்த விசேட கலந்துரையாடலில் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் உதவிப் பணிப்பாளர் திருமதி செல்லத்துரை வனஜா, மாவட்ட, பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னதாக புங்குடுதீவில் இடம்பெற்ற பாடசாலை மாணவி மீதான கூட்டு வன்புணர்வையடுத்து யாழ்.மாவட்டம் மற்றும் அதனை அண்டிய ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் சட்டவிரோத செயற்பாடு களையும் கலாசார முரண்பாட்டு விட-யங்க-ளையும் கட்டுப்படுத்துவதற்கு பல்வே-றுபட்ட செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்-பிடத்தக்கது.








