மஹிந்தவின் தலைமையில் ஆட்சியை கைப்பற்றுவோம்
ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேயாவார். அவரின் தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என மஹிந்த ஆதரவுக் கூட்டணி தெரிவித்தது.
சர்வதேச சூழ்ச்சியே மஹிந்த ஆட்சியை தகர்த்தது. மக்கள் இதை உணர்ந்து மீண்டும் எமக்கு அதிகாரத்தை வழங்க வேண் டும் எனவும் அக் கூட்டணி வலியுறுத்தியது.
அபேயராம விகாரையில் மஹிந்த ஆதரவுக்கூட்டணியால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறுகையில்,
மஹிந்த அலை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. கண்கள் இருக்கும் அனைவருக்கும் இதை நன்றாக அவதானிக்க முடியும். இதை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
மஹிந்த கூட்டணியின் பக்கம் மக்கள் பலம் அதிகரிப்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் தொடர்ந்தும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற பிரதமர் கனவை காண்கின்றார். நுகேகொடையில் ஆரம்பமாகிய மஹிந்த அலை இன்று மாத்தறையில் பேரலையாக உருவாகியுள்ளது. மாத்தறையில் முக்கிய அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதுவரையில் எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளாத மஹிந்த ராஜபக் ஷ மாத்தறைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அவர் தலைமையில் தான் அடுத்த கூட்டம் நடைபெறும் என்பதற்கு இது நல்லதொரு அடையாளமாகும்.
மேலும் இந்த அரசாங்கம் தமது சர்வாதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துகின்றது. பிரதமருக்கு எதிராக 100 க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளித்தும் அது தடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாது ஆட்சி நடத்தும் முதல் அரசாங்கம் இதுவேயாகும். இன்று நாட்டின் அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதார பிரச்சினை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மக்களின் ஆதரவு இல்லாது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்தி வருகின்றது. மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் கடந்த ஆண்டில் முழுமையாக பெற்ற வெளிநாட்டு கடன்தொகை 259.8 பில்லியன் ரூபாய் ஆகும். ஆனால் இந்த அரசாங்கம் தனது ஆட்சியில் இந்த ஐந்து மாதத்தில் மாத்திரம் 378.3 பில்லியன் ரூபாய் தொகையை வெளிநாட்டு கடனாக பெற்றுள்ளது. இவ்வாறு கடன் பெற்றால் நாட்டின் நிலைமை என்னவாகும்.
நாட்டில் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு வருகின்றன. சுயாதீன சேவைகள் தடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் சேவை முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே நாட்டில் சுயாதீன சேவைகள் கையாளப்படுகின்றன. தமக்கு எதிரான அரசியல் வாதிகளை கைது செய்வதையும் அச்சுறுத்துவதையும் தான் இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
பந்துல குணவர்தன
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக் ஷவுடன் நாம் கைகோர்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென கூறுவது ஏனென்றால் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிகார மோசடிகள் மற்றும் அரச சேவையில் ஏற்பட்டிருக்கும் மோசடிகளை மீண்டும் கட்டுப்படுத்த வேண்டும்.
மக்களின் பொருளதார, கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் மோசடிகளை தடுக்கவேண்டுமாயின் மீண்டும் நல்லாட்சியை கொண்டுவர வேண்டும். இலங்கை வரலாற்றில் மாபெரும் மக்கள் புரட்சியில் தான் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநயாக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஆட்சியமைத்தமையும் மிகப்பெரிய மக்கள் புரட்சியால் தான். யாரும் எதிர்பாராத நிலையில் மக்களின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை உருவாகினார். அதன் பின்னர் மக்கள் அலையொன்று ஒரு சந்தர்ப்பத்திலும் உருவாகவில்லை.
1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்கவும் அவ்வாறான புரட்சியை செய்திருந்தாலும் அதன் பின்னர் அவ்வாறான மக்கள் அலையொன்று உருவாகவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியிலும் மக்கள் அணியொன்று உருவாகவில்லை. ஆனால் 2015 இல் மீண்டும் மக்கள் புரட்சியொன்று ஆரம்பித்துள்ளது. இந்த மக்கள் அலையினை யாராலும் தடுக்க முடியாது. இந்த மக்கள் அலை உருவாகக் காரணம் என்னவென்றால் இந்த நாட்டில் கடந்த ஆறு மத காலத்தில் ஏற்பட்டிருக்கும் மக்களின் வாழ்வாதார சிக்கல்களும் சர்வதிகார ஆட்சியுமேயாகும். எனவே நாட்டில் அடிமட்ட மக்கள் புரட்சி ஒன்று ஏற்பட்டிருப்பதன் காரணத்தினால் தான் இவ்வாறான சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே நாம் மஹிந்த ராஜபக் ஷவுடன் கைகோர்த்து வெகு விரைவில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை விரட்டியடிப்போம். அதன்பின்னர் அமைச்சரவையுடன் கூடிய பாராளுமன்றத்தை நாம் அமைப்பதே எமது குறிக்கோளாகும். ரணிலை விரட்டியடிக்கும் போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். இந்தப் போராட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் உதவுகின்றனர். நிதி அமைச்சர் ஊழல்களை செய்தும் கல்வி அமைச்சர் மாணவர்களின் கல்வியை பாழாக்கியும் இந்த நாட்டு மக்களிடம் மீண்டும் மஹிந்தவின் தேவையினை எடுத்துக் காட்டுகின்றனர்.
அதேபோல் ரணிலை எதிர்த்து நிற்கக்கூடிய தலைவர் மஹிந்த மட்டுமேயாவார். இம்முறை மகிந்தவே ரணிலை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார்.
கேள்வி :- இந்த மக்கள் அலை தானே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தியது?
பதில் :- இந்த தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தியது மக்கள் அலை அல்ல. சர்வதே சூழ்ச்சியும் நாட்டுக்கு எதிரான முரண்பாட்டு சக்திகளுமே மஹிந்த ஆட்சியை வீழ்த்தியது. இந்த சூழ்ச்சியை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்திரா காந்தி, சேர்ச்சில் ஆகியோரும் ஆட்சியில் இருந்து மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் குறுகிய காலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். மகிந்தவும் அந்த வரிசையில் தான் உள்ளார். அவரும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்.








