மஹிந்தவின் இனவாதமும் புலிக்கதையும் இனி எடுபடாது! ரவி கருணாநாயக்க கூறுகின்றார்
மஹிந்த ராஜபக்ஷவினுடைய சர்வாதிகா ரப் போக்குடைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டில் ஜனநாயகமிக்க நல்லாட்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவும் இன்று மக்கள் மத்தியில் பேரபிமானத்தைப் பெற்றுள்ளனர்.
அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத மஹிந்த ராஜபக் ஷ இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு, ஊழல் மிக்க ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.
அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. அதேவேளை இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவினுடைய அரசியலில் இறுதி அத்தியாயம் எழுதப்படும் என நிதியமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மஹிந்தவின் இனவாத பேச்சும் புலிக்கதையும் இனி மக்கள் மத்தியில் எடுபட போவதில்லை. தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் மாத்திரமே இன்று புலிகள் இருப்பதை மக்கள் நன்கறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரபாகரனின் தேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுகிறார் என்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டிருந்தார். அது குறித்து வினவியபோதே நிதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என அனைத்துப்பிரிவினராலும் தொற்கடிக்கப்பட்டரே மஹிந்த ராஜபக் ஷ இன்று அவர் மக்கள் மத்தியில் வந்து சிறிதும் வெட்கமில்லாமல் மீண்டும் சாக்கு கேட்கிறார்.
எமது நல்லாட்சியில் நாம் நாட்டு மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். வௌ்ளை வேன் கலாசாரத்தை நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த சூழலை மாற்றியமைக்க மஹிந்தவுடன் இணைந்து சிலர் முயன்றுவருவதையும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால எந்த வகையிலும் உடந்தை இல்லை என்பதையும் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் விசேட உரையில் நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள்.
மைத்தரிபால சிறிசேன மீதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆகையினாலேயே இனவாதத்தை பரப்பி எம்மீது சேறு பூசும் முயற்சியில் மஹிந்த ராஜபக் ஷ இறங்கியுள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளையும் சவால்களையும் சாதாரண வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எங்கும் ஊழல் மோசடி சுதந்திரமாக வாய்திரக்க முடியாத நிலை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.இவற்றை இல்லாதொழிக்கவே கட்சி, இனம், மதம் என்ற எந்த வேறபாடுமின்றி மக்கள் ஒன்றிணைந்தனர். அவ்வாறு ஒன்றிணைந்து பெற்றுக்கொண்ட வெற்றியை பாதுகாப்பதற்காகவே மீண்டும் நாம் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம்.
மஹிந்த ராஜபக் ஷ தனது குடும்பத்தை போசிக்கும் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்தார். எங்கு பார்த்தாலும் ராஜபக் ஷவினரே கடந்த காலத்தில் காணப்பட்டார்கள். என்ன வேலைத்திட்டத்தை முன்னெடுத்தாலும் அவர்களின் சட்டைப் பைகளுக்கே நாடு பணம் செல்ல வேண்டும் என்பதை அப்போது நியதியாக காணப்பட்டது. ஆனால் அந்த யுகம் இன்று முற்றாக மாற்றமடைந்துள்ளது.
தமது குடும்பத்தாருக்காகவும் ஊழல் மிக்க சகாக்களை பாதுகாப்பதற்காகவுமே மீண்டும் மஹிந்த போட்டியிடுகின்றார். இவர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவே மஹிந்தவின் இறுதி அத்தியாயம் இந்த தேர்தலில் ஊர்ஜிதப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.








