Breaking News

ஶ்ரீரங்காவினால் நடத்தப்படும் மின்னலுக்குத் தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்காவினால் நடத்தப்படும் மின்னல் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் ஒளிபரப்புவவதற்கு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடைவிதித்துள்ளார். 


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே இந்த அறிவிப்பை விடுப்பதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. பிரஜைகள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஜே.ஶ்ரீரங்கா உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போது, ஜே.ஶ்ரீரங்காவினால் தொலைக்காட்சியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு அரசியல் கட்சியின் பொதுச்செயலாளரும், அரசியல் கட்சியொன்றினால் முன்மொழியப்பட்டுள்ள தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவருமான ஜே.ஶ்ரீரங்காவினால் எவ்வாறு மின்னல் அரசியல் நிகழ்ச்சியை நடத்த முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன்போது குறிக்கிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ரங்கா, முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் இருந்து ஒவ்வொரு தேர்தலின்போதும் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தன்னால் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவிப்பதாகவும் இது நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர் குறித்த மின்னல் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.

எனினும், சில மின்னல் நிகழ்ச்சிகள் ஏற்கனவே பதிவுசெய்துள்ளதாகவும், அவற்றை மாத்திரம் ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்குமாறும் ஜே.ஶ்ரீரங்கா கோரிக்கை விடுத்தார். முன்கூட்டி பதிவுசெய்யப்பட்டுள்ள மின்னல் நிகழ்ச்சிகளை பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.முஹம்மட் பார்வையிட்டு அனுமதி வழங்கினால் மட்டுமே ஒளிபரப்ப முடியும் என தேர்தல் ஆணையாளர் இதற்குப் பதிலளித்துள்ளார். அத்துடன், புதிதாக எந்தவொரு மின்னல் நிகழ்ச்சியையும் ஒளிப்பதிவு செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.