வான்புலிகள் வீசிய குண்டு கட்டுநாயக்க விமானத் தளம் அருகே கண்டுபிடிப்பு
விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் வீசப்பட்ட குண்டு ஒன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு அருகே வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு அருகே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் வீதி புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்ட போதே நேற்று இந்தக் குண்டை கண்டுபிடித்ததாக, சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிஹான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இந்தக் குண்டு, பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றினுள் புதைந்த நிலையில் காணப்பட்டது.
அந்த இடம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்தக் குண்டைச் செயலிழக்கச் செய்யும் பணியில் சிறிலங்கா விமானப்படையினர் ஈடுபடுவர் என்றும் விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிஹான் செனிவிரத்ன குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமானப்படைத் தளம் அருகே சுட்டுவீழ்த்தப்பட்ட வான்புலிகளின் விமானத்தின் சிதைவுகள் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், 20ஆம் நாள், கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது வான்புலிகளின் விமானம் தாக்குதலை நடத்தியிருந்தது. அப்போது அந்த விமானம், சிறிலங்கா விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.