புலிகளின் தங்கத்தை ஜப்பான் வர்த்தகருக்கு மகிந்த விற்றுள்ளார்?
விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனிடம் இருந்த புலிகள் அமைப்புக்கு சொந்தமான தங்கத்தில் ஒரு தொகை தங்கம் ஜப்பான் வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஊவதென்னே சுமண தேரர் தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புலிகளின் தங்கம் ஜப்பான் வர்த்தகருக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பான ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அதனை நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தங்க கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் செயலணிக்குழுவின் முன்னாள் தலைவர் காமினி செனரத், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பொறுப்புக் கூறவேண்டும்.
முன்னாள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் சம்பந்தப்பட்ட சகல தகவல்களும் எங்களிடம் உள்ளன. கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இரண்டு கொள்கலன் பெட்டிகளில் புலிகளின் தங்கம் வைக்கப்பட்டிருந்தது.
அவைகள் 16 தடவைகள் பகுதியாக கப்பலில் ஏற்றப்பட்டன. இந்த தங்க விற்பனை தொடர்பான சட்ட ரீதியான தன்மையை அறிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது எனவும் ஊவதென்னே சமண தேரர் குறிப்பிட்டுள்ளார்.








