இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தனியான கடவுச்சீட்டு – நாளை முதல் நடைமுறை
பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப் பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை இலங்கை யில் நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள இலங்கையின் பொது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் தென்னக்கோன், “பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் தற்போதைய நடைமுறையினால், சிறுவர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்களை எதிர்நொக்க வேண்டியுள்ளது.
நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ள, பயோமெட்ரிக் கடவுச்சீட்டுகளில் பத்து விரல்களின் ரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்படும் என்பதால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகளை பெற முடியாது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் கடவுச்சீட்டுகளில் உள்ளடக்கப்படும்.
கடவுச்சீட்டுக்கு பயன்படுத்தப்படும் படம் அனைத்துலக தரம் வாய்ந்த்தாக இருக்க வேண்டும் என்பதால், தெரிவு செய்யப்பட்ட சில ஒளிப்படப்பிடிப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். புதிய கடவுச்சீட்டு குற்றங்களைத் தடுக்கவும், நாட்டை விட்டு வெளியேறும், உள்வரும் நபர்களை கண்காணிக்கவும் உதவியாக இருக்கும். இந்த பயோமெட்ரிக் கடவுச்சீட்டுத் திட்டத்துக்கு அவுஸ்ரேலியா நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.