Breaking News

தேசியப்பட்டியல் விவகாரம்: ஜேவிபிக்குள்ளேயும் இழுபறி

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களை பெற்றுள்ள ஜேவிபிக்குள்ளேயும், அந்த ஆசனங்களுக்கான நியமனங்களை செய்வது தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

ஜேவிபியால் சமர்ப்பிக்கப்பட்ட 29 பேர் கொண்ட தேசியப்பட்டியல் வேட்பாளர்களில் கட்சிக்கு வெளியே உள்ள புலமையாளர்களே இடம்பெற்றிருந்தனர். எனினும், அவர்களில் இருவரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிப்பது தொடர்பாக ஜேவிபி தலைமை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கட்சிக்கு வெளியில் உள்ளவர்களை நியமித்தால் அவர்கள் கட்சியின் நலனைப் பாதுகாப்பார்கள் என்று நம்பமுடியாது என ஜேவிபியில் உள்ள ஒரு தரப்பினர் கருதுவதால், முரண்பாடுகள் எழுந்துள்ளன. முன்னதாக, தமக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒரு தமிழருக்கே வழங்கப்போவதாக ஜேவிபி தலைவர்கள், தேர்தல் பரப்புரையின் போதும், செய்தியாளர் சந்திப்புகளின் போதும், கூறியிருந்தனர்.

ஜேவிபியின் தேசியப்பட்டியலில், பிரபல எழுத்தாளர் அந்தனி ஜீவாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.