மைத்திரியுடன் பான் கீ மூன் தொலைபேசியில் பேச்சு – ஐ.நா அறிக்கை குறித்து ஆலோசனை?
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்றுமுன்தினம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.
இதன் போது, அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதற்காக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த மாதம் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச விருப்பம் கொண்டுள்ளதாகவும், பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் ஐ.நா பொதுச்சபை அமர்வில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் பிந்திய நிலவரங்கள் குறித்து, இதன் போது பான் கீ மூனுடன் பேச்சு நடத்துவார் என்று இலங்கை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த தொலைபேசிய உரையாடலை ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். எனினும் இந்தப் பேச்சுக்களில் பொறுப்புக் கூறல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதுபற்றிய விபரங்கள் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை குறித்தே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், பான் கீ மூன் முக்கியமாக தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








