Breaking News

கொழும்பு வந்தது ஐ.நா விசாரணை அறிக்கை – நாளை மைத்திரியிடம் கையளிப்பு

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை நாளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையின் பிரதி இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு ஒன்றுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்ட அறிக்கை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், குறிப்பிட்ட நாட்டின் அரச தலைவரிடம் அதன் பிரதியை கையளிப்பது மரபாகும்.

அதற்கமையவே, அடுத்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி, இலங்கை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக எடுத்து வரப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, அடுத்த மாதம் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கிடையே நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், ஐ.நா விசாரணை அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போரில் வெற்றி பெறுவதற்குத் தம்மை அர்ப்பணித்த எந்தவொரு போர் வீரரின் பெயர், இந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றிருந்தாலும் கூட, தாம் அவர்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.