தேசிய அரசாங்கம் அமைக்க ஐதேக - ஶ்ரீசுக உடன்படிக்கை கைச்சாத்து!
சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தி டப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
அலரிமாளிகையில் ஊடகங்களிடம் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, சமரச தேசிய அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்தார்.
அதன்பின் நேற்று கூடிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கம் அமைக்க இணக்கம் தெரிவித்த நிலையில் இன்று அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியேற்பு மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.








