Breaking News

மகிந்த அரசு இந்தியாவைப் புறக்கணித்து செயற்படவில்லையாம்- அனுர யாப்பா கூறுகிறார்

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவைப் புறக்கணித்து செயற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா.

குருநாகலவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”எப்படி இந்தியாவைப் புறக்கணிக்க முடியும்? உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான இலங்கையின் இறக்குமதிகள் இந்தியாவில் இருந்து தான் மேற்கொள்ளப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பெருமளவு இந்திய நிறுவனங்கள் இங்கு செயற்படுகின்றன. பிரதம நிறைவேற்று அதிகாரிகளாக இந்தியர்கள் உள்ளனர். எமது நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வது பற்றியே நாம் சிந்தித்தோம்.

அபிவிருத்தியை வேகப்படுத்துவதே எமது தேவையாக இருந்தது. இதனால் தான் சீனாவின் பங்கு நாடப்பட்டது. ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அணிசேரா கொள்கையே பின்பற்றப்பட்டது. எவருக்கு எதிராகவும் எவருடனும் அணிசேருவதில்லை என்ற கொள்கையே முன்னைய அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது.

அதே கொள்கையையே மீண்டும் மீண்டும் நாம் பின்பற்றுவோம். இந்தியாவுடன் உள்ளதைப் போலவே, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வரலாற்று ரீதியான உறவுகள் இருந்தன.” என்றம் அவர் தெரிவித்துள்ளார்.