Breaking News

அடுத்தமாதம் 30ஆம் திகதி ஜெனிவா கூட்டத்தொடருக்கு வருகிறது ஐ.நா விசாரணை அறிக்கை

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை அடுத்தமாதம் 30ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கான வரைவு நிகழ்ச்சி நிரலில், இலங்கை குறித்த விவாதம் செப்ரெம்பர் 30ஆம் திகதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினமே, பெரிதும் எதிர்பார்க்கப்படும், ஐ.நா விசாரணை அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையில், போர் தொடர்பான சாட்சியங்கள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விடயங்கள் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் 30ஆம் நாள், சமர்ப்பிக்கப்படும், ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக அன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.