ராஜபக்ஷ கூட்டம் இனவாதத்தை பரப்பி வெற்றிபெற முயற்சி! அநுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு
மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜபக்ஷவும் அவரது கூட்டமும் நாட்டில் இனவாதத்தை ஊக்குவித்து தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்றது. எனவே பொதுமக்கள் இந்த இனவாதப் பொறியில் சிக்கிவிடக்ககூடாது என்று ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வெற்றிலைக்கு புள்ளடியிடுவதன் மூலம் மோசடிக்காரர்களுக்கும் திருடர்களுக்கும் எதிராக விசாரணைகளை நடத்த வேண் டாம் தண்டனை விதிக்க வேண்டாம் என்பதே அர்த்தமாகும் என்று அவர் தெரிவித்தார்.
மொறட்டுவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மஹிந்த ராஜபக் ஷவிடம் மக்களுக்கு தெரிவிப்பதற்கு எதுவும் கிடையாது.எனவே மஹிந்தவும் அவரது கூட்டமும் நாட்டுக்குள் இனவாதப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. இந்தப் பொறியில் மக்கள் சிக்கிவிடக்கூடாது.
45 வருடங்களுக்கு முன்பு இளம் வயதில் ராஜபக்ஷ 1970இல் அரசியலுக்கு வந்து அமைச்சரானார். பின்னர் பிரதமரானார், எதிர்க் கட்சித் தலைவரானார், ஜனாதிபதியானார். இன்று மீண்டும் எம்.பி.யாக முயற்சிக்கின்றார். இன்று “தாத்தா” வயதில் மீண்டும் எம்.பி.யாக முயற்சிக்கின்றார். எமது நாட்டின் வளங்களை, நிதியை கொள்ளையடித்தது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் இறுதியில் மஹிந்தவே சிக்குவார். எனவேதான் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றார்.
மஹிந்தவின் தில்லு முல்லுகளை வெளியிட்டதால் எனக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போகிறார். நானும் தயாராக இருக்கின்றேன். இவர் செய்த மோசடிகள் தொடர்பாக சாட்சியங்களுடன் இலஞ்ச ஊழல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
அதனை நீதிமன்றத்திற்கு வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைப்பது நல்லதாகும். நீங்கள் வெற்றிலைக்கு புள்ளடியிடுவதன் மூலம் ஊழல் மோசடிக்காரர்கள் திருடர்களுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம். தண்டனை வழங்க வேண்டாம் என்றே அர்த்தப்படும்.
வெற்றிலைக்கு இல்லாவிட்டால் எதற்கு கொடுப்பது ரணிலுக்கா அதனையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் ரணில் தான் தனது ஆட்சிக்காலத்தில் அரச சொத்துக்களை தனியார் மயமாக்கினார். எனவே இம் முறை உங்கள் வாக்குகளை ஜே.வி.பிக்கு வழங்குங்கள் என்றார்.