வலி.வடக்கிலிருந்து வெளியேற மறுக்கும் இராணுவத்தால் மீள்குடியேற்றம் கேள்விக்குறியே -சுவாமிநாதன்
வலி.வடக்கில் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி பூரித்துப் போன இராணுவம் அங்கிருந்து வெளியேற மறுக்கின்றது. இதனால் மக்களுடைய மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உண்மையினை போட்டுடைத்துள்ளார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையடுத்து அவருடைய ஜக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலி.வடக்கின் மீள்குடியேற்றம் முழமையடையும் என்ற விடையம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சருடைய இக் கருத்து மிகுந்த சர்சையினை கிழப்பியுள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜ.தே.கவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிப்பது சம்மந்தமாக படைத்தரப்பினருடன் மாதமும் பேச்சுவார்த்தை நடத்தி ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் மக்களுடைய காணிகளை இராணுவத்திடம் இருந்து பெற்றுக் கொள்வது என்பது மிக சுலபமான வேலையில்லை.மக்களுடைய காணிகளை எடுப்பதற்கு படைத்தரப்புடன் தந்திரமாகத்தான் பேசி எங்களுடைய தேவைகள், காரணங்களை கூறி பெற்றுக் கொள்ள வேண்டும்.மிக நீண்ட காலமாக மக்களுடைய காணிகளில் உள்ள இராணுவத்தினர் அங்கேயே இருந்து பூசித்திருக்கின்றார்கள். எனவே உடனடியாக அந்தக் காணிகளை இராணுவத்தினர் விடுவிப்பது என்பது கடினமான விடையம். எனினும் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்.
எத்தனையோ இந்து ஆலயங்கள் இங்கு அழிக்கப்பட்டுவிட்டது. மூலஸ்தானங்களே இல்லாத கோவில்களும் இங்கு இருக்கின்றன. சில கோவில்கள் இறைவனுடைய அருளால் மூலஸ்தானம் மட்டும் இருக்கின்றது ஏனையவை அனைத்தும் அழிவடைந்து விட்டது.மக்கள் தமது கோவில்களுக்கு சென்று வணங்கக் கூடிய நிலமைகூட இங்கு இல்லை. கோவில்களைக் கூட விடுவிக்காமல் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.