குமார் சங்கக்கார விளையாடும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று
இன்று (20) ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள குமார் சங்கக்காரவிற்கு குறித்த டெஸ்ட் போட்டியின் வெற்றி மூலம் சிறந்த பிரியாவிடை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார் .
15 வருடங்களுக்கு முன்னர் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்த குமார் சங்கக்கார இன்று (20) ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளார்.
கொழும்பு பீ.சரா ஓவல் மைதானத்தில் இன்று (20) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 02 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிட்டும்.
இலங்கை அணியைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில், தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தாம் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று சிறந்ததொரு பிரியாவிடையை குமார் சங்கக்காரவிற்கு வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக நேற்று (19) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 12350 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரா்கள் வரிசையில் உலகில் 05ஆவது இடத்திலுள்ள குமார் சங்கக்கார இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை கிரிகெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார இன்று (20) தன்னுடைய 134 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.
அத்துடன் இலங்கை மண்ணில் இந்திய அணி கடந்த 22 வருடங்களாக எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றதில்லை எனவே இந்த தொடர் இந்திய அணிக்கும் மிக முக்கிய தொடராக அமைந்துள்ளது.
இந்நிலையில், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் தோல்வியை மறந்துவிட்டு, இன்று நடைபெறவுள்ள போட்டியில் சிறப்பாக விளையாடும் உறுதியுடன் இருப்பதாகவும் இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைப்போம் எனவும் இந்திய அணித்தலைவா் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்








