Breaking News

மகிந்தவைப் பிரதமராக்க புதிய முயற்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்குமாறு கோரி அழுத்தம் கொடுக்கும் நோக்கில் கையொப்பங்களை திரட்டும் புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றியீட்டினால், மகிந்தவை பிரதமராக்கும் நோக்கில் இவ்வாறு கையொப்பங்கள் திரட்டப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள நீண்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மகிந்த ஆதரவு தரப்பினர் இந்த புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், மஹிந்தவை பிரதமராக்குமாறு கோரும் விசேட மகஜர் ஒன்றில் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன. இவ்வாறு கையொப்பமிட மறுக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் பகிரங்கமாக கோரவும், மஹிந்த ஆதரவு தரப்பு திட்டமிட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 113 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டாலும் இதுவரையில் சந்தர்ப்பம் கிடைக்காத ஒர் சிரேஸ்ட உறுப்பினரே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் திட்டவட்டமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.