உள்ளக விசாரணையை வடமாகாண சபையிடம் வழங்க திட்டம்– ஐ.ம.சு.மு.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எமது கைகளில் உள்ளது. மஹிந்த –மைத்திரி ஆட்சியில் ஆறுமாத காலத்துக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருவோம்.
ஆனால் வடக்கு கிழக்கை இணைப்பது ஒருபோதும் சாத்தியமற்றது. அதேபோல் 13க்கு உள்ளே தீர்வை காண்பதே எமது நிலைப்பாடாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்றுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த போதே கட்சியின் உறுப்பினர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் அறுபது மாதங்களில் புதிய அரசாங்கம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பது உண்மையேயாகும். ஏனெனில் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இந்த நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய காலப்பகுதியில் இந்த நாட்டின் நிலைமை மிகவும் அச்சுறுத்தலான நிலையில் தான் இருந்தது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரபாகரன் ஆகியோர் ஒன்றிணைந்து நாட்டில் பிரிவினைக்கான அடித்தளத்தை பலமாக அமைத்திருந்தனர்.
வடக்கு,கிழக்கு இணைந்த தமிழீழத்தை அமைக்கும் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்றவுடன் பிரிவினைக்கான பாதையினை மூடிவிட்டு ஒன்றிணைந்த இலங்கை என்ற பாதையினை ஆரம்பித்துக் கொடுத்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நாட்டில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை எவராலும் மறுக்க முடியாது.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் எழு மாதங்களே நாடு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலப்பகுதியில் மீண்டும் பிரிவினைக்கான பாதையினை ஆரம்பித்துள்ளனர். இவர்களது ஆட்சியில் தமிழீழத்துக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதற்கான அடுத்தகட்ட நகர்வை நேற்று அமைச்சரவை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது இலங்கையின் மீதான போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேச தலையீட்டில் முன்னெடுக்க அனுமதிப்பது இல்லை என்று அரசாங்கம் கூறினாலும் உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்துவதாக கூறியுள்ளது. ஆனால் இந்த உள்ளகப் பொறிமுறையினை வடமாகாண சபையிடமே அரசாங்கம் ஒப்டைக்கவுள்ளதென்ற ரகசிய தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. ஆகவே சர்வதேச விசாரணையை விடவும் மோசமான நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது.
அதேபோல் நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டுமாயின் மஹிந்த –மைத்திரி கூட்டணி அமைய வேண்டும். அதேபோல் இந்த நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வும் எம்மிடமே உள்ளது. இந்த நாட்டில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களை வென்றவர் மஹிந்த ராஜபக் ஷவேயாகும். ஒட்டுமொத்த சிங்கள மக்களும் இன்று மஹிந்தவின் தலைமைத்துவத்தை விரும்புகின்றனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம் மக்களின் மனங்களை வென்றவர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பி வாக்களித்தனர்.ஆகவே பிரச்சினைக்கான தீர்வு இப்போது எமது அரசாங்கத்திடமே உள்ளது.
ஆனால் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கோரி வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் அதன் பின்னர் நாட்டில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும். இப்போது வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருபவர்கள் பின்னர் தனிநாட்டை கோருவார்கள். ஆகவே இந்த நாட்டை பிரிக்க எந்த சக்திகளுக்கும் இடம் கொடுக்க முடியாது.
கேள்வி :- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சமஷ்டியை எதிர்க்கின்றதா?
பதில் :- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சமஷ்டியை எதிர்ப்பதை விடவும் இந்த நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் தயாரில்லை என்பது தான் எமது நிலைப்பாடாகும். ஆரம்பத்தில் சமஷ்டியை ஆதரித்த நிலைமை எமது பக்கமும் இருந்தது. ஆனால் 199௦ஆம் ஆண்டுகளில் நாட்டின் நிலைமை முழுமையாக மாறிவிட்டது. குறிப்பாக அதிகாரப் பகிர்வை முன்வைத்து நாட்டை பிரிக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டது.
சமஷ்டி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் முறைமை என்பதை நாம் இப்போது ஏற்கத் தயாராக இல்லை. சோவியத் குடியரசு துண்டு துண்டாக பிளவுபட்டதும் ஏனைய ஒருசில நாடுகளில் பிரிவினைவாதம் உருவாகவும் இந்த சமஷ்டி முறைமை தான் காராணமாக இருந்தது. இப்போது இருக்கும் நிலையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்த அதிகாரப்பகிர்வை நோக்கி சென்றால் தனிநாட்டினை கோருவதே இவர்களது அடுத்தகட்ட நடவடிக்கையாக அமையும்.
கேள்வி :- 13ற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்குவதென்ற நிலைப்பாட்டில் நீங்களும் இருந்தீர்களே?
பதில் 13ற்கு அப்பால் சென்ற அதிகாரப் பகிர்வை பொறுத்தவரையில் மாறுபட்ட நிலைப்பாடுகளும் உள்ளன. அதாவது 13இல் இருக்கும் சில சரத்துக்களை நீக்கிவிட்டு வேறு சில சரத்துக்களை உட்புகுத்தி 13ஐ நடைமுறைப்படுத்த முடியும். அல்லது மக்களின் கருத்துக்கு அமைய செயற்படுத்த முடியும். இவற்றில் ஏதேனும் ஒரு முறையை கையாள்வதே சரியானது என்ற நிலைப்பாடே எம்மிடம் இருந்தது. ஆனால் என்ன முடிவாக இருந்தாலும் 13 க்கு உள்ளே தீர்வை காண்பதே எமது நிலைப்பாடாகும். இதற்கு அப்பால் போவது தொடர்பில் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கேள்வி :- உங்களின் அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன?
பதில் :- இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதில் ஆரம்பத்திலேயே நாம் தவரிழைத்துள்ளோம். அப்போதே அதிகாரப்பகிர்வை நோக்கி பயணித்திருந்தால் இன்று நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. ஆனால் அப்போதிருந்தே பிரதான இரு கட்சிளும் இனப்பிரச்சினக்கான தீர்வை காண்பதில் அக்கறை காட்டவில்லை. ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி தயாராக இருந்த வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி ஏதேனும் காரணங்களை காட்டி தடுத்தமையும், ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்த போது எமது தரப்பினர் ஏதேனும் காரணங்களை காட்டி தடுத்தமையுயே நடந்தேறியது.
எனினும் இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு என்பது சிக்கலான ஒன்றல்ல. ஆனால் இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களின் ஆதரவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும். இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு எந்த சிக்கலும் வராத வகையில் எதையும் செய்யமுடியும். எனவே எமது அரசாங்கத்தில் இனப்பிரச்சினைகான தீர்வு சாத்தியமானது. மஹிந்த –மைத்திரி தலைமையில் ஆறுமாத காலத்தில் இனப்பிரசினகனதீர்வை நாம் பெற்றுத்தருவோம். சாத்தியமான ஒன்றாகவே இதை கருதுகின்றோம் என்றார்.