ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமராக பதவியேற்பு
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்கவுள்ளார் . ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 16ஆவது பிரதமராகவே பதவியேற்கின்றார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க 16 ஆவது
பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை ஹுனுபிட்டி கங்காராம விஹாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். எனினும் ரணில் விக்ரமசிங்க தலைமை யிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களும் இன்றைய தினமே பதவியேற்பார்களா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன் வர்த்தமானியி்லும் வெளிவரவில்லை. எனவே இன்றைய தினமே அமைச்சர்கள் பதவியேற்பது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகின்றது. எவ்வாறெனினும் ஒருசில அமைச்சர்கள் பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றது. தேர்தலில் அறுதி பெறும்பான்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கவில்லை என்றாலும் கூடிய ஆசனங்களை பெற்ற கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
சாதனை வெற்றி
இம்முறை எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 500566 விருப்பு வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார். இலங்கை அரசியலை பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்புவாக்குகளாக ரணில் விக்ரமசிங்க இம்முறை பெற்ற விருப்பு வாக்குகள் அமைந்துள்ளன. இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தனர்.
ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்கவுள்ளார். அவர் இதற்கு முன்னர் 1993 2001 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பிரதமராக பதவியேற்றிருந்தார். அந்தவகையில் இம்முறை நான்காவது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவால்கள்
1977 ஆம் ஆண்டு முதல் தடவையாக இளம் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க பியகம தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார். 1977 ஆம் ஆண்டிலிருந்து ரணில் விக்ரமசிங்க ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றிபெற்றே வந்துள்ளார்.
சர்வதேச மட்டத்திலும் சிறந்த தொடர்புகளை கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க சிறந்த கல்விமானாகவும் தெற்காசியாவில் மூத்த அரசியல்வாதியாகவும் கருதப்படுகின்றார். கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் சந்தித்த நிலையிலேயே தற்போது தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
கடந்தகாலம்
கடந்த 1994 ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிமைக்கப்பட்டபோது பிரதமரானார். எனினும் அந்த அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டதையடுத்து மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார். 2010 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னரும் எதிர்க்கட்சித் தலைவரானார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைததிரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் அப்போது மூன்றாவது தடவையாக அவர் பிரதமரானார். அந்தவகையில் தற்போது நான்காவது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








