தேர்தல் காலத்தில் பக்கசார்பாக ஊடகங்கள் செயற்பட்டன- ஜரோப்பிய ஒன்றிம் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஒருசில தனியார் ஊடகங்களும் அதன் முகாமைத்துவங்களும் குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு சார்பாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இரண்டு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தலைமை கண்காணிப்பாளர் கிறிஸ்டியன் டேன் பிரடா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
“ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் நேர்மையானதும் சுதந்திரமானதும் குறைந்தளவு முறைப்பாடுகளையும் கொண்டதாக அமைந்திருந்தது.
தேர்தல் தினத்தில் ஒருசில சிறிய சம்பவங்களைத் தவிர அமைதியாகவே வாக்களிப்பு நடைபெற்றது. வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நடைமுறைகள் சிறப்பாக நடைபெற்றது என்பது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் கருத்தாகும்.
தேர்தல்கள் ஆணணையாளரும், அவரது ஊழியர்களும் முன்னெடுத்த தேர்தல் பணிகள் சிறப்பானதாக அமைந்தது இதில் அனைவருக்கும் பங்குண்டு.
தேர்தல் சுற்றறிக்கைகளை வெளியிடுதல், மற்றும் வழிகாட்டி வெளியீடுகள் என்பனவும் சட்டத்திற்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட்டன.
அங்கீகரிக்கப்பட்ட 35 அரசியல் கட்சிகள், 200ற்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழுக்கள், 22 தேர்தல் மாவட்டங்களில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்கியதோடு, பிரசார நடவடிக்கைகளிள் போது சட்டத்தை மதித்து நடந்துகொண்டனர்.
பிரசார நடவடிக்கைகளின்போது வேட்பாளர்கள் வீட்டுக்கு வீடு சென்று கையேடுகளை விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்ககைகளுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, வாக்காளர்களுடன் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருசிலர் உயிரிழந்திருந்தனர். ஒருசில தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியிருந்தன. பெரிய தேர்தல் சட்டமீறல்கள் ஒருசில பதிவாகியிருந்தாலும் அது பொலிஸாரின் தலையீட்டில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதே தவிர விரிவாக்கப்படவில்லை.
தேர்தல் செலவுகள் குறித்து ஒழுங்குப்படுத்தப்படவில்லை ஆகவே அது குறித்து எவ்வித முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் தேர்தல் பிரசாரங்கள் நிறைய செலவுகள் செய்யப்பட்டு ஆடம்பரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில வேட்பாளர்கள் 500 ஆயிரம் யூரோக்களை செலவிட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அரச தொலைக்காட்சிகள் பிரதான கட்சிகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது. ஒருசில தனியார் ஊடகங்களும் அதன் முகாமைத்துவங்களும் அவர்களது அரசியல்வாதிகளுக்கு கையேடு விநியோகித்தல் உள்ளிட்ட உதவிகளை வழங்கியிருந்தன. குறிப்பிட்ட அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு பிரசார விளம்பரங்களை ஒளிபரப்பியதையும் அவதானிக்க முடிந்தது.“ என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தேர்தல் காலத்தில் பக்கசார்பாக செயற்பட்ட ஊடகங்கள் பரவலாக பேசப்பட்டதுடன், சில புனையப்பட்ட, முன்கூட்டியே திட்டமிட்டு சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளும் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








