Breaking News

பூநகரிக்கு அண்மித்த சிறுதீவில் பாரியளவிலான புதிய வெடிபொருட்கள்


பூநகரிக்கு மிகவும் அண்மித்த பகுதியில் காணப்படும் சிறு தீவொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களைப் பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய தேடுதலின் போது மீட்டுள்ளனர்.

வெடிமருந்து வியாபாரத்துக்காக இந்த வெடிபொருட்கள் கடத்தப்பட்டு இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த வெடிபொருட்கள் வேறு இடங்களில் இருந்து கடத்தப்பட்டு, இங்கு பதுக்கி வைக்கப்பட்டு பின்னர் வேறு இடங்களுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் காணப்படும் இந்த சிறுதீவில் மனிதர்கள் யாரும் வாழ்வதில்லை. ஆனால் அண்மைக்காலமாக இந்தப் பகுதியில் ஆள் நடமாட்டங்கள் இருந்ததையும், படகுகள் வந்து சென்றதையும் மீனவர்கள் கவனித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் தீவுக்கு சென்று பார்த்தபோது அப்பகுதியில் பாரியளவிலான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். உடனடியாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த தீவை சோதனை நடத்த விசேட பொலஜஸ் குழு ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து சென்றது.

அவர்கள் அங்கு நடத்திய தேடுதலின் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான செல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இந்தத் தீவு சட்டவிரோத பொருட்களைக் கடத்துவந்து மறைத்து வைக்கவும், இடம்மாற்றவும், போதைப்பொருள் கடத்தலுக்கும் பயன்பட்டிருக்கலாம் என அயல் கிராம மக்கள் தெரிவித்தனர்.


இந்தத் தீவை அண்டிய பகுதிகளில் இராணுவமும், கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளும் நிலைகொண்டிருந்தாலும், குறித்த வெடிபொருட்கள் அந்தக் காலத்துக்குரியவையல்ல எனத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத மீன்பிடிக்காகப் பயன்படும் டைனமைற் போன்றவற்றைத் தயாரிப்பதற்கு இதனைப் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இத்தகைய வெடிபொருட்கள் 3000 ரூபா தொடக்கம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும், இத்தீவில் வைத்தே செல்கள் பிரிக்கப்பட்டு அதிலிருக்கும் வெடிமருந்து விற்பனை செய்யப்பட்டதாகவும் அயல் கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று குறித்த தீவை சோதனையிட்ட பொலிஸாரும், அதிரடிப் படையினரும் மீட்கப்பட்ட பாதுகாப்பாக செயலிழக்க செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பததோடு, வெடிபொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.