தன்னாட்சிக்கும் நீதிக்கும் அழுத்தம் கொடுக்கும் இலங்கைத் தமிழர்கள்
தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பரந்துபட்ட தன்னாட்சி உரிமை, இலங்கையில் வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும்.
வீதித்தடைகளும், இராணுவ சோதனைச் சாவடிகளும் காணாமற் போய்விட்டன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அந்தப் பகுதிக்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன.
ஆனால், இலங்கையின் வடக்கில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் பெரும்பாலான தமிழர்கள், நீண்ட உள்நாட்டுப் போரின் காயங்களை ஆற்றுவதற்கு இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டியுள்ளதாக கூறுகிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமக்கு பயனளிக்கும் என்று நம்புகிறார்கள்.
அந்தப் பிராந்தியத்தில் இராணுவச் சட்டங்களைக் நடைமுறைப்படுத்தி வந்த, பலம்வாய்ந்த ஆட்சியாளராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களித்திருந்தனர்.
அவரையடுத்து பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்தின் தெருக்களில் இருந்து கணிசமான படையினரைக் குறைத்து, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளார்.ஆனால், தமிழர்களுக்கும் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் இடையில், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதான தனது தேர்தல் வாக்குறுதியை, இன்னமும் நிறைவேற்றவில்லை என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
இலங்கை அரசாங்கம் எப்போது எமக்கு சமஷ்டிக் கட்டமைப்புக்குள் தன்னாட்சி உரிமையை வழங்குகிறதோ அப்போது தான், நாம் சமரசம் செய்து கொள்ள முடியும் என்று, வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.“தன்னாட்சி உரிமை வழங்கப்படும் போது எமது 90 வீதமான பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.” என்கிறார் அவர். தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பரந்துபட்ட தன்னாட்சி உரிமை வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும்.
ஆயுதமோதல்கள் முடிந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்ட போதும், அதற்கு சட்டமன்ற அதிகாரங்கள் குறைவாகவே உள்ளன.
“இலங்கை அரசாங்கத்துக்கு மக்கள் ஒரு செய்தியை சொல்வதற்கு இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.” என்கிறார் அவர். கொழும்புக்கு வடக்கே 400 கி.மீ தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்தில், குண்டுகள் போடப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகளும், ஆயுத மோதல்கள் முடிந்து ஆறு ஆண்டுகளின் பின்னரும், இன்னமும் முகாம்களில் வாழும் பல மக்களும் இருக்கின்றனர்.
கடந்த ஜனவரியில் சிறிசேன பதவிக்கு வந்த பின்னர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, உறுதியான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை என்கிறார் சிவஞானம். ஆனால், அந்தப் பிரதேசத்தில் இருந்து வந்த அச்சமான சூழ்நிலை மறைந்து விட்டதுடன், குடும்பத்தினர் தமது நண்பர்களை தங்க வைத்திருக்கும் போது, புலனாய்வாளர்கள் வீடுகளுக்குச் செல்வதும் நின்று விட்டது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தமிழ் மக்கள் மெதுவாக மூச்சு விடத் தொடங்கியுள்ளனர் என, ஏஎவ்பியிடம் குறிப்பிட்டார் உள்ளூர் வர்த்தக சம்மேளனத் தலைவர் ஆர்.ஜெயசேகரம். ”இப்போது அங்கு அச்சமான சூழல் இல்லை. முன்னர், கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினால், நாம் எவருடனும் பேசுவதில்லை.” என்கிறார் அவர்.
பொதுமக்களின் வாழ்வில் இராணுவத் தலையீடுகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக குறிப்பிட்டார் பிரதேசத்தின் உயர் அரச நிர்வாக அதிகாரியான, நாகலிங்கம் வேதநாயகன். “நாங்கள் இப்போது, இராணுவத்துடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதில்லை, காவல்துறையினருடனேயே தொடர்புகளைக் கொண்டுள்ளோம்” என்கிறார் அவர்.
நீதிக்கான கோரிக்கை
2009இல் முடிவடைந்த 37 ஆண்டு கால கரந்தடிப் போரின் இறுதிக் கட்டங்களில், அரச படைகளால் கொல்லப்பட்டதாக ஐ.நா கூறும் 40 ஆயிரம் தமிழர்களுக்கு நீதி கோருவதற்கு அங்குள்ள மக்களுக்கு கிடைத்துள்ள புதிய சுதந்திரங்கள் ஊக்கமளிக்கின்றன. இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரம் கோரி, போரிட்ட தமிழ்ப் புலிகள் இடைவிடாமல் தொடரப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம், முற்றுமுழுதாகத் தோற்கடிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான படையினரும் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தனர்.
தனது தலைமையின் கீழ் இருந்த- பெருமளவில் சிங்களவர்களைக் கொண்ட இராணுவம், எந்தவொரு பொதுமகனையும் கொல்லவில்லை என்று ராஜபக்ச எப்போதும் கூறிவந்தார். அத்துடன், குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஐ.நாவின் ஆணைபெற்ற விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைக்க மறுத்தார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் தமிழர்களின் பெரும் ஆதரவுடன் பதவிக்கு வந்த சிறிசேன, விசாரணைகளை மேற்கொள்வதற்கு நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
“போர்க்குற்றங்களை இழைத்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” என்று ஏஎவ்பியிடம், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கூறினார் சிவஞானம். “இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உள்நாட்டு முறைகளின் மீது எமக்கு நம்பிக்கை வைக்க முடியாது.” என்கிறார் அவர்.
வெளிநாட்டு விசாரணையாளர்களை அழைப்பது, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாக அமையும் என்றும், தேசிய இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சிங்களத் தேசியவாதிகள் பார்க்கின்றனர்.வரும் செப்ரெம்பரில், அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணையாளர்களுக்கு ராஜபக்ச அரசாங்கம், நுழைவிசைவு கூட வழங்கவில்லை.
தமிழர்களால் உள்நாட்டு விசாரணையை நம்பமுடியாது. நம்பகமான வெளிநாட்டு விசாரணயே வேண்டும் என்கிறார், 2009இல், படையினரினரிடம் சரணடைந்து இன்னமும் காணாமற்போயுள்ள தமிழ்ப் புலியின் மனைவியாகிய, வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்த தவறினால், நான் நீதியைத் தேடி ஐ.நாவுக்குச் செல்வேன் அல்லது ஏதாவது ஒரு அனைத்துலக அமைப்பிடம் செல்வேன்” என்று அவர் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஏஎவ்பியிடம் குறிப்பிட்டார்.