Breaking News

ஐ.நாவின் எத்தகைய உதவிகளும் வட மாகாணசபை ஊடாக வழங்கப்படாது – இலங்கை அரசாங்கம்

வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐ.நாவினால் மேற்கொள்ளப்படும் எத்தகைய உதவிகளும், வடக்கு மாகாணசபை ஊடாக வழங்கப்படமாட்டாது என்றும், மத்திய அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவே வழங்கப்படும் என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில், வடக்கு மாகாணத்துக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க ஐ.நா முடிவெடுத்ததாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளித்துள்ள, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, “மீளக்குடியமரும் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கியது தவிர, வடக்கில் ஐ.நாவினால் வேறு பிரதான திட்டங்கள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

வழக்கமான நடைமுறைகளின் படி புனர்வாழ்வு அமைச்சின் ஊடாகவே அது மேற்கொள்ளப்படுகிறது. அவர்களால் மாகாணசபைகளுடன் நேரடியாக தொடர்பு வைக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.