Breaking News

இலங்கை அரசை தட்டிக்கேட்க இந்திய அரசு முன் வரவேண்டும்!

இராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மீனவர் பாதுகாப்பு மற்றும் மது எதிர்ப்பு பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் பங்கேற்ற த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை இலங்கை சிறையில் உள்ள 14 மீனவர்களின் குடும்பத்தினர் மீனவ மகளிர் தலைவி இருதயமேரி தலைமையில் சந்தித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டுத்தருமாறு மனு கொடுத்தனர். 

மீனவர்களின் குறைகள் குறித்து மீனவர் சங்க தலைவர் போஸ், எமரிட், சிப்பி ஜேசு ஆகியோர் எடுத்துக் கூறினர். 

பின்னர் ஜி.கே.வாசன் பேசும்போது கூறியதாவது:– 

நான் இங்கு மீனவர் பாதுகாப்பு மற்றும் பூரண மது விலக்கை வலியுறுத்தியும், கட்சியை வலுப்படுத்தும் முகமாக பேசுவதற்காகத்தான் வந்தேன். ஆனால் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மனு கொடுத்ததையும், இங்கு அமர்ந்திருக்கும் மீனவ பெண்களையும், மீனவர்களையும் பார்க்கும்போது அவர்களின் முகம் மகிழ்ச்சி இல்லாமல் ஒரு சோகத்தைப் பார்க்கிறேன். 

இதனைப் பார்க்கும் போது உடனடியாக இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதுதான் எனது முதல் பணி என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் அரசியல் கட்சி பாகுபாடின்றி ஒன்றுபட்டு ஏழை மீனவர்களை விடுவிக்க குரல் கொடுக்க வேண்டும். மீனவர்கள் நாளுக்கு நாள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்க செல்கின்றனர். 

அவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் பிரச்சினை செய்வது ஒரு வழக்கமாகவே உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய–மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இலங்கை அரசை தட்டிக்கேட்க இந்திய மத்திய அரசு முன் வரவேண்டும். இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

இலங்கையில் தேர்தல் நடப்பதை காரணம் காட்டி மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கை தள்ளிப்போகிறது. வருகிற 13–ம் திகதி மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். 

அன்று கண்டிப்பாக விடுதலை செய்ய மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். அவ்வாறு 13–ம் திகதி விடுவிக்காவிட்டால் த.மா.கா சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும், இவ்வாறு அவர் குறிப்பிட்டார் என தமிழக ஊடகமான மாலை மலர் செய்தி வௌியிட்டுள்ளது.