Breaking News

முதல்வரின் காணொளி - கலக்கத்தில் கூட்டமைப்பு

சுமந்திரனின் இரகசிய திட்டங்கள் அடங்கிய நேர்காணலும் அதன் பின்னர் வடக்கு முதல்வர் வெளியிட்ட அதிருப்திகளும் பலத்த நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக அறியவருகின்றது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதான அறிவிப்பின் மத்தியில் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்னெடுத்து பதவி கவிழ்க்கப்போவதாக அவரது சக அமைச்சர்கள் இருவர் அச்சுறுத்தியுள்ளமை தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு அமைச்சர்கள் சுமந்திரன், மாவையோடு உள்ள அதேவேளையில், முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்களே முதலமைச்சருக்க எதிராக நடக்கும் சதிகளை அம்பலப்படுத்தியதாக தெரியவருகிறது. வடமாகாணசபை அமைச்சர்கள் இருவர் முன்னதாக முதலமைச்சரினை நேரில் சந்தித்து தேர்தலில் நடுநிலை வகிக்கும் முடிவை மீள் பரிசீலினை செய்யுமாறு கோரியதாக தெரியவருகின்றது.

கடந்தவாரம் முதல் முதலில் முதல்வரின் அறிக்கை வெளியாகி மறுநாள் நாம் முதல்வருடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றை முதன் முதலில் நாம் வெளிப்படுத்தியிருந்தோம் (அந்த நேர்காணல் முழுமையான விபரம்) அந்த காணொளியில் முதல்வரின் நிலைப்பாடு மிகத் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டதோடு த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக அறிய வருகின்றது.

இப்படியே போனால் தமது ஏமாற்று அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிவரும் என SMS (சம்பந்தர் - மாவை - சுமந்திரன்) அணியினர் விளங்கிகொண்டுள்ளதாகவும் இருந்தாலும் அதனை சாதுரியமாக கையாள அவர்கள் தீர்மானித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.

தங்களது அறிவிப்பினால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். மக்களிற்கு தெளிவுபடுத்தவும் கூட்டமைப்பின் ஒற்றுமையினை வலியுறுத்தவும் பிரச்சாரங்களில் கூட்டமைப்பிற்கு ஆதவாக செயற்பட அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதேவேளை, சிறீலங்கா புலனாய்வுத் துறையோடு தொடர்புடைய டான் ரீவியில் தோன்றிய சட்டத்தரணி சிறீகாந்தா அச்சுறுத்தும் பாணியில் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த காணொளியையும் வெளியாகியிருந்தது.

குறிப்பாக தற்போதைய சூழலில் சம்பந்தனது வெற்றியென்பது கூட கேள்விக்குறியாகியிருப்பதாகவும் கிழக்கில் பிரதிநிதித்துவம் இழக்கப்படாலாமெனவும் சுட்டிக்காட்டியதாக தெரியவருகின்றது. குறிப்பாக கூட்டமைப்பில் போட்டியிட அனுமதி கோரிய விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் ரூபனிற்கு இடம் வழங்க மறுத்திருந்த நிலையில் அவர் தற்போது பகிரங்கமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கது.

யாழிலும் த.தே.கூட்டமைப்பின் இளைஞர் அணியினை சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் பலர் தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்காக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

சுமந்திரன் - மாவை நெறிப்படுத்தலில் சி.வீ.கே சிவஞ்ஞானம் இரண்டு மாகாண அமைச்சர்களைத் தூண்டிவிட்டுள்ளார். ஏனைய ஒரு அமைச்சரை அணுகிய போது, குறித்த அமைச்சர் மறுப்புத் தெரிவித்ததோடு, முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அகற்றிவிட்டு அந்த பதவியை கைப்பற்ற சி.வி.கே சிவஞ்ஞானம் முயன்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அறிய வருகின்றது.

அதற்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் பதவி இழப்பது பற்றி தனக்கு கவலையில்லையெனவும் மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் தனது அறிவிப்பிற்கு பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு இம்முறை முன்னிறுத்தி வாக்கு கோருவதற்கு ஒரு தலைவர் இன்றி அல்லாடி வருகின்றது.

ஏற்கனவே முதலமைச்சர் தெரிவின் போது விக்கினேஸ்வரன் வரவுள்ளார் என அறிந்த சி.வீ.கே சிவஞானம் உடனடியாகவே யாழ்மாவட்ட தமிழரசுக்கட்சி சார்பில் மாவை சேனாதியே முதலமைச்சர் வேட்பாளர் என அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும் இங்கு கவனிக்க வேண்டும்.

சம்பந்தன், சுமந்திரனை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தால் மக்கள் கவனத்திலெடுக்கமாட்டார்களென்ற அடிப்படையில் முதலமைச்சரினை முன்னிறுத்தி பிரச்சாரங்களிற்கு அனைவருமே திட்டமிட்டிருந்தனர். அவரை தம்முடன் இணைத்து பிரச்சாரம் செய்தாலே கூட்டமைப்பு ஓரளவு ஆசனத்தையாவது வடகிழக்கில் பெறுமென்ற நிலை இருக்கின்றது. 

இந்த நிலையில் கிளிநொச்சியில் வேட்பாளரான சிறீதரன் பகிரங்கமாகவே முதலமைச்சருடன் முன்னைய காலங்களில் நிகழ்வுகளில் கலந்துகொண்ட படங்களை இணைத்தாவது பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.

இதேவேளை, முதலமைச்சரது ஆதரவு கிடைக்காததால், சயந்தன் மற்றும் சுகிர்தனைத் தொடர்ந்து இன்று மற்றுமொரு மாகாணசபை உறுப்பினரான கஜதீபன் சுமந்திரனுக்கு ஆதரவான பிரச்சாரத்தை கைதடியில் ஆரம்பித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் முரண்பட்டால் முதலமைச்சர் திடீரென முடிவுகளை மாற்றிவிட்டால் கூட்டமைப்பு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிவரலாம் என்பதால் அடக்கிவாசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

கனடாவிலிருந்து செயற்படும் அடுத்த வயோதிபரும் கனடாகிளை பொறுப்பாளருமான கனடா நக்கீரன் தங்கவேலு என்பவர் முதலமைச்சரின் முடிவு தொடர்பில் பொங்கி எழுந்திருக்கின்றார். அவர் தனது முகநூலில் முதலமைச்சரை காரசாரமா திட்டி தீர்த்திருக்கிறார். (குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள்)

என்ன இருந்தாலும் எமது குற்றங்களை இப்படி காணொளியில் சொன்னால் மக்கள் எப்படி எமக்கு வாக்களிப்பார்கள் எப்படி அடுத்த ஐந்தாண்டுகளை கொண்டுசெல்வது என்பதுபற்றியே அனைவரும் சிந்திக்கின்றார்களே தவிர தமது குறைகளை திருத்தி சரியான பாதையில் பயணிப்பதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் தயார் இல்லை என்பதே யதார்த்தம்.

எது எப்படியிருந்தபோதும் தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சருடன் முரண்படுவதை தவிர்த்து மென்வலு அழுத்தநிலையை பயன்படுத்தி அவரை கூட்டமைப்புக்கு சார்பாக முடிவெடுக்க வைப்பது என்றும் அது சாத்தியப்படாமல் போனால் தேர்தலின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிய வருகின்றது.

முன்னைய பதிவுகள்  

முதல்வரின் புறக்கணிப்பு ஏன் -அவருடனான நேர்காணல்( காணொளி இணைப்பு)

யாருக்காகவும் மேடை ஏறமாட்டார் முதலமைச்சர்!(அறிக்கை இணைப்பு) 

அமெரிக்கா அடக்கி வாசிக்க சொன்னதா? முற்றிலும் பொய்-விக்கி(இலண்டன் உரை -காணொளி)

நாம் தனி இராட்சியமாக இருந்தவர்கள் விக்கினேஸ்வரன் (காணொளி இணைப்பு) 

தமிழர்களுக்கு ஒன்றையும் சிங்களவர்களுக்கு ஒன்றையும் கூறுவது மடமை(காணொளி)