Breaking News

இலங்கை ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் – ஜனாதிபதி

எதிர்கால சவால்களை முறியடிப்பதற்காக, இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் பிராந்தியத் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், பிராந்திய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் அவர்கள் எவ்வாறு கரிசனை கொண்டுள்ளனர் என்பதை பார்க்கிறேன்.

அனைத்துலக சக்திகள் பூகோள, பிராந்திய, தேசிய பாதுகாப்புத் தொடர்பாக, எவ்வாறு சிந்திக்கின்றன என்பதை நானும் அறிவேன்.அனைத்துலக நட்பு நாடுகளின் உதவி இலங்கைக்குத் தேவை. அவர்களிடம் இருந்து நாம் தனிமைப்பட்டு செயற்பட முடியாது.

கொமன்வெல்த், ஐ.நா, சார்க், அமைப்புகளில் உள்ள எமக்கு அனைத்துலக கடப்பாடுகள் உள்ளன. அனைத்துலக நிதி நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம். எமக்கு அனைத்துலக ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.