மட்டக்களப்பில் தேர்தல் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு :விசாரணை ஆரம்பம்
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் தேர்தல்கள் அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர்கள் இடையூறு செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரது ஆதரவாளர்களே இவ்வாறு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வேட்பாளரின் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸர் காத்தான்குடியில் உள்ள நகர மண்டபத்திற்கு சென்றிருந்தனர்.
இதன்போது அவர்களது கடமைக்கு குறித்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாக தேர்தல்கள் செயலகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுஇதனையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பிலிருந்து விசேட பிரதிநிதி ஒருவரும் காத்தான்குடி பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தேர்தல் அதிகாரிகள் செயற்பட மாட்டார்கள் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.