கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வதேச விசாரணை கோரப்படவில்லை - அனந்தி சசிதரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் விசனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு கூட்டமைப்பிலுள்ள சிலரே காரணம் எனவும் அவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டுமெனவும் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
2013 இல் வடமாகாண மக்கள் என்னை மாகாணசபைக்கு அமோகமான வாக்குகள் மூலம் தெரிந்தெடுத்தார்கள். நீண்ட நெடிய போரில் என்னைப்போல இழப்புகளுக்கு முகம்கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப் பயன்படுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முன்கூட்டியே வழங்கியிருந்தேன். அதுமட்டுமல்ல, எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்வுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.
மாவிலாறில் போரை அரசாங்கம் பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கும் இறுதிக்கணம் வரை சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இறுதியாக இருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்ப் ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச் சாட்சியம்.
போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக அரசாங்கம் மாற்றியதற்கும், அந்தப் போரின் முடிவின் இறுதிக்கணங்களில் கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக்கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார்? அவருக்கு நடந்தது என்ன? எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேச மக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு இன அழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன்வைத்தேன்.
உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், வட மாகாண சபை சார்பாகவும் முதன் முதலில் ஐ.நா. மனித உரிமை சபையில் நேரடியாக இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான் கோரும் வரை வேறு எந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாணசபை உறுப்பினரோ அங்கு கலந்துகொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.
என்னைக்கூட இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோரக்கூடாது என்று தடுக்கப்பட்டமையை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன்.
மாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடிகோலுபவர்களாக சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உழைத்தோம். எமது உழைப்பிற்கு மேலாக எதிர்பாராத பலனாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக் கூடாக, மக்களின் அபிலாஷைகளை விளங்கிய நிலையில் கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை, வடமாகாணசபை ஏக மனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றுள்ளது.