Breaking News

கூட்டமைப்பு சமஷ்டி முறைக்கு செல்­வதை முதலில் மஹிந்­தவே தீர்­மா­னித்தார் - சம்பிக்க

மஹிந்­தவே முதலில் நாட்டை பிரிக்கும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்தார். சமஷ்டி முறைக்கு செல்­வதை முதலில் மஹிந்­தவே தீர்­மா­னித்தார் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைக்கும் சமஷ்டி கோரிக்­கைக்கு நாம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் இடம் கொடுக்க மாட்டோம் எனவும் அவர் தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினர் நேற்று கொலன்­னாவை பிர­தே­சத்தில் நடத்­தி­யி­ருந்த மக்கள் கூடத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டை இரண்­டாக்கும் வேலைத்­திட்­டத்தை ஐக்­கிய தேசிய முன்­னணி முன்­னெ­டுத்து செல்­வ­தாக மஹிந்த அணி­யினர் தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால் இந்த நாட்டை பிரிக்கும் வேலைத்­திட்­ட­மா­னது முதலில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவ­ருடன் எப்­போதும் ஒட்­டிக்­கொண்­டி­ருந்த ஜி.எல்.பீரிஸ் ஆகி­யோரே கொண்­டு­வந்­தனர். அவர்­களின் திட்­டத்தை நாம் தான் அன்று முழு­மை­யாக முறி­ய­டித்தோம். அவ்­வா­றான நிலையில் இனி எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாம் இந்த நாட்டை இரண்­டாக்கும் எந்­த­வொரு நட­வ­டிக்­கைக்கும் இடம் கொடுக்க மாட்டோம்.

நாட்டில் மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷ தனது அதி­கா­ரத்தை மீண்டும் பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்தில் இன­வாத கருத்­துக்­களை பரப்பி இந்த நாட்டில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பெற்ற ஜன­நா­ய­கத்தை இன­வா­தத்தின் மூல­மாக அழிக்க முயற்­சிக்­கின்றார். அன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சமஷ்டி பற்றி பேசு­கையில் மஹிந்த ஒரு கட்­டத்தில் அதை ஏற்­றுக்­கொண்டார். ஆனால் இன்று எம்­மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி எம்மை பிரி­வினை வாதி­க­ளாக சித்­த­ிரிக்க முயற்­சிக்­கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமது சமஷ்டி கோரிக்­கை­யினை 1949 ஆம் ஆண்டே முன்­வைத்­து­விட்­டது. அன்றில் இருந்து கூட்­ட­மைப்­பினர் அதி­காரப் பகிர்வு என்ற கனவில் மட்­டுமே செயற்­பட்டு வரு­கின்­றனர். சமஷ்டி முறை­மையை நாட்டில் உரு­வாக்க வேண்­டு­மாயின் மக்கள் வாக்­கெ­டுப்­பிற்கு செல்ல வேண்டும். அதேபோல் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவும் அவ­சி­ய­மா­ன­தாகும். ஆனால் பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் 15 ஆச­னங்கள் அள­வி­லேயே தன்­வ­சப்­ப­டுத்தி வைத்­துள்­ளனர். ஆகவே இந்த நாட்டில் பிரி­வினை என்ற வார்த்தை நாம் இருக்கும் வரையில் ஒரு­போதும் நடை­மு­றைக்கு வராது.

தேர்­தலின் பின்னர் எமது முதல் செயற்­பா­டா­னது இந்த நாட்டை ஒன்­றி­ணைந்த நாடாக மாற்­று­வ­தே­யாகும். அதேபோல் தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வது, நாட்டில் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் நிரந்­தர­மாக ஏற்­ப­டுத்­து­வ­தாகும். அவ்வா­றான நீண்­ட­தொரு வேலைத்­திட்­டத்தை நாம் முன்­னெ­டுத்து வரும் நிலையில் இந்த நாட்டை பிரிக்கும் எந்தவொரு வேலையும் எமது ஆட்சியில் முன்னெடுக்கப்படாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கைக்கு நாம் எந்த சந்தர்ப்பத்திலும் இடம் கொடுக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார்.