சந்திரிகாவை சு.க.விலிருந்து நீக்குவது தொடர்பில் மத்தியகுழுவில் ஆராயப்படும் - சுசில் தகவல்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்தும், அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்படும்
என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.தேர்தல் காலத்தில் கட்சியை குழப்பியடிக்க முடியாததனால் இப்போது அமைதி காப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போசகரும் கட்சியின் முக்கிய உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் ஐக்கிய தேசியக் முன்னணியின் உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவின் கட்சிக் காரியாலயத்துக்கு விஜயம் செய்திருந்ததுடன் தான் அர்ஜுன ரணதுங்கவை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தீர்மானங்கள் அனைவருக்கும் சமமானதாகவே செயற்படுத்தப்படும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் எவரேனும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டாலோ அல்லது கட்சிக்கு முரணான வகையில் செயற்பட்டாலோ அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது கட்சியின் மத்தியக்குழுவின் தீர்மானமாகும்.
அந்த வகையில் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொண்டோம். மத்தியகுழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக இருந்தோம். ஆனால் அதற்கு முன்னதாகவே கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துவிட்டார். கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்களை நீக்குவதாக அவர் தெரிவித்ததனூடாக மத்திய குழுக் கூட்டத்தின் வேலையை குறைத்துவிட்டார்.
இந்த சட்டம் கட்சியின் அனைவருக்கும் பொருந்தும். கட்சியின் போஷகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க கட்சியின் இருந்துகொண்டே எதிர்க்கட்சியின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டிருப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டியுள்ளது.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சின் வேட்பாளர் அர்ஜுன ரணதுங்கவின் அலுவலகத்துக்கு சந்திரிகா சென்றிருந்தமையும், தாம் அர்ஜுனவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தமையும் ஊடகங்களின் மூலமாக அறியக்கூடியதாக இருந்தது. எனவே இந்த செயற்பாடுகள் தொடர்பில் நாம் தீர்மானம் எடுப்போம்.
மேலும் அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்தும் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்தும் கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்படும். இப்போது அனைவரும் தேர்தலுக்கு முகம்கொடுத்திருப்பதால் கட்சியின் மாற்றங்கள் தொடர்பில் உடனடியாக தீர்மானங்களை எடுக்க முடியாது.எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கூடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது மத்தியகுழுக் கூட்டத்தில்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உறுப்புரிமை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.