ஊழல் செய்யவில்லை என்றால் ரணில் விவாதத்துக்கு வரவேண்டும்! சவால் விடுக்கிறார் டிலான் பெரேரா
இந்த ஆறுமாத காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஊழல் செய்யவில்லை என்றால் மக்களின் நிதியை கொள்ளையடிக்கவில்லை என்றால் தைரியமாக எங்களுடன் நேரடி விவாதத்துக்கு வரவேண்டும்.
தைரியம் இருந்தால் எனது சவாலை ஏற்றுக்கொண்டு ரணில் விவாதத்துக்கு வரவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் டிலான் பெரேரா சவால் விடுத்தார். எம்மைக் கண்டு ஓடி ஒளியவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தபோதே டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியில் மஹிந்த கூட்டணி ஊழல்கள் செய்ததாகவும் எம்மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த அரசாங்கத்தின் நல்லாட்சிக்காரர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்றுவரையில் எம்மீது எந்தவொரு வழக்கையேனும் தாக்கல் செய்ய முடியவில்லை. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆறுமாத கால ஆட்சியில் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆதாரங்களுடன் நிரூபிக்க நாம் தயாராக உள்ளோம்.
மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் இன்றுவரை இவர்கள் உண்மையை வெளிப்படுத்தவில்லை. மத்திய வங்கி ஊழல் நடந்திருப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்றுக்கொண்டுள்ளார். மத்திய வங்கி ஊழல் விடயத்தில் மத்திய வங்கி ஆளுநரை பதவிவிலக்க பிரதமருக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆகவே மத்திய வங்கி விடயத்தில் மிகப்பெரிய நிதி மோசடி நடைபெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
அதேபோல் அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் வேலையினை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது. பல பில்லியன் ரூபா கொள்ளையடித்துள்ளனர். கொழும்பு –கண்டி அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி என்ற பெயரில் ஐநூறு பில்லியன் ரூபா கொள்ளையடித்துள்ளனர். அதேபோல் நாம் முடிவுக்கு கொண்டுவந்த பாதாள உலக கோஷ்டி கலாசாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியினர் மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் மக்கள் முன்னிலையில் விவாதிக்க நாம் தயாராக உள்ளோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் எம்முடன் விவாதிக்க வரவேண்டும். எம்மைக் கண்டு ஓடி ஒளிய வேண்டாம். ஐக்கிய தேசியக் கட்சி ஊழல் செய்யவில்லை என்றால் மக்களின் நிதியை இந்த ஆறுமாத காலத்தில் கொள்ளையடிக்கவில்லை என்றால் தைரியமாக எங்களுடன் நேரடி விவாதத்துக்கு வரவேண்டும். தைரியம் இருந்தால் எமது சவாலை ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.