மௌனம் கலைத்தார் முதலமைச்சர்
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கியமான பகுதிகள் கீழே.
* இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன்.
* போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு எமது இனத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு கட்டமைப்புகளை சிதைத்துள்ளது. இவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அமைவாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக மேற்கொள்ளும் வாய்ப்பு நான் முதலமைச்சராக பதவியேற்ற பின் கிடைத்தது. அதனை, மிக ஆழமாக ஆராய்ந்து பார்த்த பின்பே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிப்பதென்ற முடிவையெடுத்தேன்.
* நீங்கள் தேர்ந்தெடுக்கும் கட்சி எமது தனித்துவத்தையும் சுயநிர்ணயத்தையும் உறுதிப்படுத்தும் கட்சியாக இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னுந் தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்ற கட்சியாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதிதேடுவதற்குப் பின்னிற்காத கட்சியாக, சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் உறுதியுடன் உள்ள கட்சியாகத் திகழவேண்டும். தமிழ் மக்களின் கௌரவம், சமத்துவம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் சமரசம் செய்யாத கட்சியாக இருக்க வேண்டும்.
* சரணகதியடையாமல், எமது தனித்துவத்தையுஞ் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி வரும் கட்சியை அடையாளங் காணுவது உங்களுக்குச் சிரமம் அளிக்காது என்று எண்ணுகின்றேன்.
* அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் கட்சியில் இருக்கும் நேர்மையான, கொள்கையில் உறுதியுடைய, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய, தூரநோக்குப் பார்வைகொண்ட, எத்தருணத்திலும் விலைபோகாத மனோதிடம் கொண்ட வேட்பாளர்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.








