Breaking News

யாகாவாராயினும் நாகாக்க - சிறிதரனுக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி!!

நல்லூர் செட்டித்தெருவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின்
பிரசாரக்கூட்டம் ஒன்றில் பேசிய வேட்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் தன்னை கைது செய்து தாக்கியதை விட அப்போதிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் தன்னைத்தாக்கியது தனக்கு இன்னும் வலித்துக்கொண்டிருப்பதாக ஓர் புதிய கதையை அவிழ்த்து விட்டு அனுதாபம்தேட முற்பட்டுள்ளார்.

இது பத்திரிகையிலும் ஓர் செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதன் காரணமாக இதற்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமும் செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய தேவையும் எமது கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

2010ம் ஆண்டு தேர்தலின்போது இந்த வலியைப்பற்றி பொதுமக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் ஏன்; அவருக்கு ஏற்படவில்லை? அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக சுரேஸ்பிரேமச்சந்திரனுடைய பாராளுமன்ற வாசஸ்தலத்துற்குச் சென்று தேர்தலில் போட்டியிட தனக்கு ஓர் ஆசனம் வேண்டுமென்று கேட்டபோதும் ஏன் வலிக்கவில்லை?


தான் செய்தவற்றையும் செய்ய இருப்பதைப் பற்றியும் தனது கொள்கையையும் விபரித்து வாக்குகேட்க முடியாமல், விருப்பு வாக்கில் பின்தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கூட்டமைப்புக்குள்ளேயே சேறடிக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளார்.



வட்டக்கச்சியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்க முற்பட்ட சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஆதரவாளர்கள் ஸ்ரீதரனின் ஆட்களினால் அச்சுறுத்தப்பட்டு தாக்க முனைந்தபோது பொலிசார் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். கூட்டமைப்பின் வேட்பாளர் சரவணபவனின் ஆதரவாளர்களுக்கும் இதேநிலை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நடவடிக்கைகள் கூட்டமைப்பை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

குப்பி கடிக்காதவர்கள் போராளிகள் அல்ல என வவுனியாவில் அவர் பேசிய பேச்சொன்றை தான் அவ்வாறு பேசவில்லை அவ்வாறு பேசி இருந்தால் அதனை நிரூபிக்கும்படியும் சவால்விட்டிருந்தார். ஆனால் அவர் அப்படித்தான் பேசினார். இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடியாகவே பத்திரிகைகளுக்கு அறிவித்திருந்தனர்.

இப்பொழுது ஸ்ரீதரனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றோம். 28 வருடங்களுக்கு முன்பு அதாவது 1987 ம் ஆண்டு எங்கே எப்பொழுது யார் ஏன் அவருக்கு அடித்தார்கள் என்பதை அவரால் நிருபிக்கமுடியுமா? அல்லது இவ்வாறு ஓர் புனைகதையை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்கள் அதன்மூலம் தனது தவறுகளை மறைத்து அனுதாப வாக்குகளைப் பெறலாம் என்ற நரித்தனமா?

தேர்தலில் வாக்குச் சேகரிக்க இத்தகைய கீழ்த்தரமான வேலைகளில்கூட இவர் ஈடுபடுவார் என்பதை நினைக்கும்போது அவரது நேர்மையின்மீது சந்தேகம் வருகிறது. கூட்டமைப்பின் ஓர் அங்கமான தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள்
அவதானமாகப் பேசுவது நல்லது என்பதை அக்கட்சியின் தலைவர்கள் புரிந்துகொண்டு வேட்பாளர்களுக்கு தகந்த ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

ந.சிவசக்தி ஆனந்தன். 
பொதுச்செயலாளர், 
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
03.08.2015

தொடர்புள்ள செய்திகள்