இலங்கைத் தமிழர்களுக்கு அமெரிக்காவும் துரோகம் இழைத்து விட்டது : வைகோ
இலங்கைத் தமிழர்கள் மீது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசுகளிடமும், ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடம் துளியளவு இரக்கமும் இல்லை என ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான திருத்தப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை மற்றும் இலங்கைக்கு ஆதரவான ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் செயற்படுகள் குறித்து இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது :-
‘ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலின் 30வது அமர்வில் மனித உரிமை ஆணையர் அல் செயித் ராஃப் {ஹசைன் தாக்கல் செய்த 19 பக்க அறிக்கையும், 2014 இல் மனித உரிமை ஆணையர் நியமித்த மார்ட்டி அட்டிசாரி, சில்வியா கார்ட்ரைட், ஆஸ்மா ஜஹாங்கீர் ஆகிய மூவர் குழுவின் 268 பக்க அறிக்கையும்,
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப் படுகொலை உண்மைகளை ஓரளவு வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததோடு, நீதிக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தந்தது.
அதனை அடியோடு நாசம் செய்யும் விதத்தில் அமெரிக்க அரசு தற்போது வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. அந்த வரைவுத் தீர்மானம் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சதி செய்து அமெரிக்க அரசு முன்வைத்துள்ள அயோக்கியத்தனமான தீர்மானம் ஆகும்.
இதில் கலப்பு விசாரணை என்ற சொல் கூட இல்லை. சிங்கள அரசாங்கமே உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள், நீதிபதிகளை அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
2010 ஆண்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த மார்சுகி தர்சுமன் உள்ளிட்ட மூவர் குழு அறிக்கையைப் பற்றி இத்தீர்மானத்தில் ஒரு வரி கூட இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ராஜபக்ஷ நியமித்த எல்.எல்.ஆர்.சி. என்ற முழு மோசடி பித்தலாட்டக் குழு அறிக்கையைத் தீர்மானத்தில் வரிக்கு வரி அமெரிக்க அரசின் தீர்மானம் புகழ்ந்து தள்ளியுள்ளது.
இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டதாகவும், நீதித்துறை சரி செய்யப்பட்டு விட்டதாகவும், தமிழர் பகுதிகளுக்கு எது தேவையோ அது தரப்படும் என்றும் கூறுகிறது.
தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவத்தை உடனே வெளியேற்றுவதற்கான ஏற்பாடோ, சிங்கள குடியேற்றங்களை முற்றாக அகற்றுவதற்கான ஏற்பாடோ எதுவும் சொல்லப்படவில்லை. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்தது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசுகளிடம், ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடம் தமிழர்கள் மீதான எள்ளளவு இரக்கமும் இல்லை.இந்தப் பின்னணியில் செப்டம்பர் 30 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெற இருக்கும் தீர்மான வாக்கெடுப்பில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்படும்.
தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அங்கீகரித்து இந்திய அரசு செயல்பட போகிறதா? அல்லது வழக்கம்போல தமிழர்களுக்குத் துரோகம் செய்யப் போகிறதா? என்பதை தமிழ்க்குலம் கவனித்துக் கொண்டிருக்கிறது.
1948 பிப்ரவரி 4 ஆம் திகதியில் இருந்து 2011 வரை ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு இழைத்த கொடுமைகள், நடத்திய இன அழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட ஈழத்தமிழ் இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடைபெற வேண்டும்.
தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவமும், குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும். சிறைகளில் வாடும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பினை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடமும் ஐ.நா. மன்றம் நடத்த வேண்டும். இதுவே ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். அதுவே எமது இலக்கு.
நாளை செப்டம்பர் 26, தியாக தீபம் திலீபனின் நினைவுநாள். அந்த நாளில் தோழர் தியாகுவும், தமிழ் உணர்வாளர்களும் ஏற்பாடு செய்திருக்கின்ற, நமது எதிர்கால கடமை குறித்த சிறப்புக் கூட்டம் சென்னை, தியாகராயர் நகர், தெய்வநாயகம் பள்ளித் திடலில் மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.
செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று மே 17 இயக்கமும், தமிழ் உணர்வாளர்களும் அறிவித்திருக்கின்ற அமெரிக்கத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டத்திற்கு காலை 10 மணியளவில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் இருந்து போராட்ட அணி புறப்பட இருக்கிறது.இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளும், ஈழத்தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன்.’ என்றும் கூறினார்.








