குற்றமிழைக்க இராணுவத்தினருக்கு உத்தரவிட்டது யார்? ஆராய வேண்டும் என்கிறார் மங்கள
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரை கொடூரமான குற்றமிழைக்குமாறு பணித்தவர்கள் யார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்போதே ஊடகவியலாளர் மத்தியில் இந்த கேள்வியினை அவர் தொடுத்திருந்தார். ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் போர்குற்றங்கள் தொடர்பில் அதிகமானவை இலங்கை பாதுகாப்பு அமைச்சினை சார்ந்தவையாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எந்தவொரு இராணுவத்தினரும் தனிப்பட்ட காழ்புணர்சியின் அடிப்படையில் குற்றமிழைக்கவில்லை என்றும் யுத்த களத்தில் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை முன்னெடுக்கவில்லையென தெரிவித்த அவர் மேலிடத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவுகளை கொண்டே இராணுவத்தினர் குற்றமிழைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆகவே இராணுவத்தினர் மீது சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் இராணுவத்தினருக்கு கட்டளைகளை வழங்கியது யார்? எங்கிருந்து கட்டளைகள் வந்தன? என்பது தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்படுமென உறுதியளித்திருந்தார். இதேவேளை ஐநா அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ள போர்குற்றங்களின் தரப்படுத்தலில் தமிழ் பெண்கள் கொடூரமான பாலியல் வன்புணர்விற்கு பின்னர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.