Breaking News

கலப்பு நீதிமன்றத்திற்கு எதிராக அமைச்சர்கள் பலர் போர்க்கொடி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாகவும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புமுறை நீதிமன்றம் குறித்தும் அரசாங்கம் நாடாளும ன்றத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது கேள்வி எழுப்புவார்கள் என்றும் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக விவாதம் ஒன்றை நடத்துமாறு விமல் வீரசவன்ச கோரிக்கை விடுப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கொழும்பில் ஒன்று கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது. அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை சந்தித்து உரையாடியதாகவும் தெரிய வருகின்றது.

கலப்புமுறை நீதிமன்றத்திற்கு ஆதரவு வழங்கினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலர் இராஜினமா செய்வார்கள் என்றும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

அதேவேளை இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமல் கலப்புமுறை நீதிமன்றத்தை அமைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா தொடர்பாக ஜெனீவாவில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை தொடர்பில் மக்களை குழப்பும் வகையில் சிலரால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரங்கள் தொடர்பிலும், அறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.